மணிரத்னம் மீது மேலும் புகார்கள்.. கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்!

|

More Distributors Rush Commissioner Office

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அவர் ஈடுகட்டித் தர வேண்டும் என்று கோரி அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல விநியோகஸ்தர்கள் சென்னை காவல் துறை ஆணையரிடம் மணிரத்னம் மீது புகார் கொடுத்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான படம் கடல். இதனை ஜெமினி நிறுவனம் வெளியிட்டது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி படு தோல்வியைச் சந்தித்தது. ஆனால் மணிரத்னம் எந்த நஷ்டமும் இல்லாமல் தப்பிவிட்டார். காரணம் இந்தப் படத்தை அவர் ஜெமினிக்கு ரூ 27 கோடி லாபம் வைத்து விற்றுவிட்டாராம்.

படம் வெளியாகி தாறுமாறான நஷ்டத்தை ஏற்படுத்தியதால், படத்தை விநியோகித்தவர்கள் மணிரத்னம் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

ஆனால் மணிரத்னமோ, எனக்கும் கடல் படத்துக்கும் சம்பந்தமில்லை. காரணம், படத்தை நான் மொத்தமாக ஜெமினிக்கு விற்றுவிட்டேன். என லாப நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பு என ஒதுங்கிவிட்டார்.

மேலும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் போலீசில் கோரினார்.

இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்காரர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடல் படம் மூலம் தங்களுக்கு ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி புகார் கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, இப்போது படத்தை வெளியிட்ட மற்ற ஏரியா விநியோகஸ்தர்களும் புகார் மனுவோடு கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுத்துள்ளனர்.

மணிரத்னம்தான் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர். அவரை நம்பித்தான் படம் வாங்கினோம். ஜெமினி நிறுவனத்தை அல்ல. எனவே எங்களுக்கு மணிரத்னம் நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி புகார் கொடுத்துள்ளனர்.

 

Post a Comment