சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடிய சின்னத்திரை நடிகைக்கு தான் இயக்கும் திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் டி. ராஜேந்தர்.
சின்னத்திரை குடும்பங்கள் பங்கேற்கும் சன் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முதலில் சுகன்யா, மீனா, கங்கை அமரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இப்போது சூப்பர் 8 சுற்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களும் மாறியுள்ளனர். கங்கை அமரன் சன் சிங்கர் நடத்த போய்விட்டதால் அவருக்கு பதிலாக டி.ராஜேந்தர் நடுவராக வந்துள்ளார். சுகன்யாவிற்கு பதிலாக நடிகை சங்கீதாவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் காயத்ரி ஜெயராமுடன் சின்னத்திரை நடிகர் தீபக் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் உறவுகள், திருமதி செல்வம், இளவரசி என 8 சீரியல் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.
இதில் உறவுகள் குடும்பத்தில் இருந்து வந்த சின்னத்திரை நடிகை, நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்... பாடலைப் பாடி அசத்தினார். பாடலைக் கேட்டு அசந்து போன டி. ராஜேந்தர், தான் இயக்கும் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.
சின்னத்திரை நடிகர்கள் நடிப்பதற்கு மட்டுமே தெரிந்திருப்பார்கள் என்று நினைத்து வந்த தனக்கு அவர்களின் பலவித திறமைகள் வியப்பில் ஆழ்த்துவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் யாரையும் விமர்சனம் செய்யாத டி. ராஜேந்தர் அவர்களை பலவிதங்களில் உற்சாகப்படுத்துகிறார்.
Post a Comment