விஷால், குமரிமுத்துவுக்கு நடிகர் சங்கம் மீண்டும் நோட்டீஸ்

|

Second Notice Vishal Kumari Muthu

சென்னை: எப்போதும் இல்லாத அளவுக்கு விஷால் மற்றும் குமரி முத்து விவகாரத்தில் கடுமை காட்டி வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

இருவரும் ஏற்கெனவே அளித்த விளக்கங்கள் திருப்தியாக இல்லாததால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் சங்க நிர்வாகிகள்.

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் நடிகர்கள் விஷால், குமரிமுத்து பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

"விஸ்வரூபம்" படம் ரிலீசாக தடங்கள் ஏற்பட்ட போது நடிகர் சங்கம் கமலுக்கு உதவவில்லை என்று விஷால் விமர்சித்திருந்தார்.

இதற்கு நடிகர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இதற்கு விஷால் பதில் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தனது மனதில் பட்டதை சொன்னதாகவும் என்னை புண்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சமர் பட சம்பள பாக்கியை நடிகர் சங்கம் தனக்கு வாங்கித் தரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம் செயற் குழு உறுப்பினர்களிடம் சமர்பிக்கப்பட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசினார்கள். இறுதியில் விஷாலிடம் விளக்கம் கேட்டு இன்னொரு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

குமரி முத்து

நடிகர் சங்க நிர்வாகிகளை அவமதித்து கருத்து வெளியிட்டதாக நடிகர் குமரிமுத்துக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பபப்பட்டிருந்தது. செயற்குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் குமரிமுத்து செயற்குழுவுக்கு வரவில்லை. தனக்கு வேறு பணிகள் இருப்பதால் வர இயலவில்லை என்று கடிதம் அனுப்பி இருந்தார்.

எனவே அடுத்த செயற்குழுவில் ஆஜராகும்படி குமரிமுத்துவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

 

Post a Comment