மும்பை: நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டுக்கு வெளியே நடு ராத்திரியில் வந்து கோஷம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் இரண்டு பெண்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.
மும்பை பந்த்ராவில் சல்மானின் வீடு உள்ளது. அங்கு நேற்று இரவு ஒரு தாயும், மகளும் காரில் வந்தனர். அங்குள்ள பாதுகாவலர்களிடம் சல்மான் கானைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். பாதுகாவலர் விட மறுத்தார். இதையடுத்து அத்துமீறி உள்ளே நுழையப் பார்த்தனர்.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் வருவதைப் பார்த்த தாயும் மகளும் வேகமாக காரில் ஏறிப் பறந்தனர். படு வேகமாக அவர்கள் கார் ஓட்டிச் சென்றபோது, வழியில் ஒரு பைக் மீது இடித்து விட்டனர். பைக்கில் வந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதையடுத்து கோபத்தில் அந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து அந்த ஆணைத் தாக்கி விட்டுப் பறந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் தேடி வந்த போலீஸார் அவர்கள மறித்து நிறுத்தி அவர்கள் மீது அதி வேகமாக கார் ஓட்டிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களது முகவரி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு விடுவித்தனர்.
நேற்று அவர்களின் வீட்டுக்குப் போலீஸார் போனபோது இருவரும் அங்கு இல்லை. நள்ளிரவில் பெண்களைக் கைது செய்யக் கூடாது என்பதற்காக அவர்களை முதல் நாளே போலீஸார் கைது செய்யவில்லையாம்.
அந்தப் பெண்களின் பெயர் ஜஸ்மித் சேத்தி மற்றும் அம்ரிதா என்று தெரிய வந்துள்ளது.
இருவரும் படத் தயாரிப்பாளர்கள் என்று கூறப்படுகிறது. சல்மானைச் சந்திக்க அவரது செயலாளர் ரேஷ்மா ஷெட்டி ரூ. 10 லடசம் கேட்டதாகவும், இதனால்தான் கோபமடைந்து நேரடியாக சல்மான் வீட்டுக்கே அவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தப் புகாரை ரேஷ்மா மறுத்துள்ளார். மேலும் சல்மானின் தந்தை சலீம் கானும் இப்புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து சலீம் கான் கூறுகையில், சில தினங்களாகவே அவர் தொந்தரவு செய்து வருகிறார். காங்கிரஸ் தலைவரைத் தெரியும், பிரச்சினை செய்வேன் எனறும் மிரட்டி வருகிறார் என்றார்.
Post a Comment