அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோசடி நடந்துள்ளது என்று கூறி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர் அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?  

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்பது எப்படி எம்ஜிஆரைக் குறிக்குமோ, அப்படி சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை மட்டுமே குறிக்கும் இதை அடுத்தவருக்கு பறித்துக் கொடுக்க முனைவது தவறு என்று கண்டித்தனர். குறித்த பத்திரிக்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த கருத்துக் கணிப்பே மோசடியானது என்றும், இதில் உண்மையில் வென்றவர் அஜீத்தான், ஆனால் அவரை அணுக முடியாத கோபத்தில் விஜய்க்கு இப்படி ஒரு பட்டம் தந்ததாகவும், அதற்கு விஜய்யும் உடந்தை என்றும் அஜீத் ரசிகர்கள் கொதிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து முன்னணி நாளிதழும் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிலு செய்துள்ளனர்.

சென்னையில் இன்று கூடிய அஜீத் ரசிகர்கள் (முன்னாள் மன்றப் பொறுப்பாளர்கள்), இதுகுறித்து ஆலோசனை செய்தனர். இறுதியில், நீதிமன்றத்தில் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செயதுள்ளனர்.

சரி, இதெல்லாம் அஜீத்துக்கு தெரியுமா ரசிகர்களே..!

 

ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த விஜய்யின் கத்தி ட்ரைலர்!

சென்னை: விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் முதல் ட்ரைலரை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, விஜய்-சமந்தா நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி. இதன் படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.

ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த விஜய்யின் கத்தி ட்ரைலர்!

சில தினங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டமும், முதல் விளம்பர சுவரொட்டிகளும் வெளியாகின. இவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 22-ம் தேதி விஜய் பிறந்த நாளன்று வெளியான இந்த முன்னோட்ட காணொளிக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10 லட்சம் பார்வையாளர்கள கிடைத்துள்ளனர்.

இந்த முன்னோட்டப் படமும், சுவரொட்டி வடிவமைப்பும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டிவி விளம்பரத்தை முழுவதுமாக தழுவி எடுக்கப்பட்டது என்பது அம்பலமான போதும், விஜய் ரசிகர்கள் தந்த உற்சாகமான ஆதரவே இதற்குக் காரணம் எனப்படுகிறது.

இந்தப் படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் என்ற வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.

 

கமல் கோபம்... மன்னிப்பு கேட்ட சந்தானம்!

வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம்.

சமீபத்தில் சந்தானம் நடித்த வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடந்தது.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல் வந்திருந்தார். சந்தானமே நேரில் வந்து அழைத்ததால் அவர் வந்திருந்தார்.

கமல் கோபம்... மன்னிப்பு கேட்ட சந்தானம்!

ஆனால் விழாவின் நாயகனான சந்தானமோ நிகழ்ச்சிக்கே வரவில்லை. லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்ததாகக் காரணம் கூறினாராம்.

இது கமலுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சந்தானம் குறித்து ஒரு வார்த்தை பேசாத கமல், விழா முடிந்ததும் தன் கோபத்தை நேரடியாகவே காட்டிவிட்டுச் சென்றாராம், தயாரிப்பாளரிடம். 'சந்தானம் நேரில் வந்து கேட்டுக் கொண்டதால் நான் வந்தேன். அவரோ தன் ஷூட்டிங்தான் முக்கியம் என்று நின்றுவிட்டாரே'என்றாராம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சந்தானம், உடனே கமலுக்கு ஹைதராபாதிலிருந்து போன் செய்து பேசியுள்ளார். தன் நிலைமையைச் சொல்லி, மன்னிப்புக் கேட்ட பிறகே, கமல் கொஞ்சம் அமைதியானாராம்!

 

பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

சினிமா பிஆர்ஓ யூனியன் தேர்தலில் தலைவராக விஜயமுரளியும், பொதுச் செயலராக பெருதுளசி பழனிவேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னிந்திய சினிமா பிஆர்ஓக்கள் யூனியனின் தேர்தல் நேற்று நடந்தது.

இதில் தலைவராக விஜயமுரளி ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளர் பதவிக்கு மௌனம் ரவி தேர்வு செய்யப்பட்டார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

9 செயற்குழு உறுப்பினர்களாக நிகில் முருகன், வி.எம்.ஆறுமுகம், இனியன் ராஜன், மேஜர்தாசன், கிளாமர் சத்யா, ரியாஸ் கே.அகமது, துரைப்பாண்டி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரு.துளசிபழனிவேல் செயலாளராகவும், கோவிந்தராஜ், என்.சங்கரலிங்கம் இருவரும் துணைத் தலைவர்களாகவும், கணேஷ்குமார் மற்றும் வெங்கட் இருவரும் இணைச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சங்கத்தினர் அறிக்கையை வெளியுட்டுள்ளனர்.

 

காதல் கிசுகிசு பரப்புற: நடிகருக்கு செம டோஸ்விட்ட நயன நடிகை

சென்னை: காதல் கிசுகிசு பரப்பியதற்காக இளம் நடிகர் ஒருவருக்கு நயன நடிகை செம டோஸ் விட்டுள்ளார்.

டர்பன் கட்டி மூனுஷாவின் ஜோடியாக நடித்த படம் மூலம் கோலிவுட் வந்தவர் அந்த பாலிபில்டர் நடிகர். 6 அடி 1 அங்குளம் உள்ள அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மனிதர் பப்ளிசிட்டி பிரியர்.

அவர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் காதல் என்ற வதந்தியை பரப்பிவிடுவார் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் அவர் நயன நடிகையுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிக்கையில் தனக்கும் நயன நடிகைக்கும் காதல் ஏற்பட்டுவிட்டதாக வதந்தியை பரப்பியுள்ளார். இது குறித்து அறிந்த நடிகை நேராக சென்று நடிகருக்கு செம டோஸ் கொடுத்துள்ளார்.

உடனே அவர் நான் ஒன்றும் காதல் என்று எல்லாம் கூறவில்லை மீடியா தான் அப்படி தெரிவித்துள்ளது என்று பழியை மீடியா மீது போட்டுவிட்டாராம். ஏற்கனவே நடிகைக்கும் அவரது முன்னாள் காதலரான விரல் நடிகருக்கும் மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் இந்த புதிய கிசுகிசு வேறு.

 

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி

நட்சத்திர கிரிக்கெட் மாதிரி இப்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி ஆரம்பமாகிறது.

பேட்மிண்டன் எனும் இறகுப் பந்தாட்டம் வெகு பிரபலமானது. விளையாடவும் லகுவானது. இந்த விளையாட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அனைத்து வயதினராலும் விளையாடப்பட்டு வருகிறது.

இப்போது திரையுலகினரை வைத்து இந்த விளையாட்டை தொழில் முறையிலான ஒரு பெரிய போட்டியாக நடத்த முடிவு செய்துள்ளனர், இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக் எனும் அமைப்பினர்.

இதில் கலந்து கொள்ள தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை 50 நடிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருண்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, ராய் லட்சுமி, ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜுலை 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது இந்தப் போட்டி. அன்றைக்கு துவக்க மட்டும்தான்.

தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.

 

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில்.

அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

இப்படி எங்கும் வியாபித்துள்ள சினிமாவை வைத்தே ஈழ ஆதரவுக் குரல்களை முடக்கிப் போட முயற்சித்துள்ளார் இலங்கை அதிபரும், தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றியவருமான ராஜபக்சே.

ஈழப் போருக்குப் பின் தமிழ் உணர்வாளர்கள், போராட்ட இயக்கங்களை வலுவிழக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். புலம்பெயர் தமிழர்களால்தான் ஈழத்துக்கு விடிவு என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுக்குள் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். ஒரு நாட்டில் ஆயிரம் இலங்கை தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் 1001 குழுக்கள் உருவாகியிருக்கின்றன.

இவர் தலைமை அவருக்குப் பிடிக்காது... அவர் தலைமை இவருக்குப் பிடிக்காது... என தமிழ் நண்டுகளாக அவர்களை பிளவுபட வைத்த ராஜபக்சே, அவர்களில் பலரை தனது பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார். பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களோ, ஈழப் போராட்டம் தங்கள் சம்பந்தமே இல்லாத சமாச்சாரம் என்ற ரீதியில் கோட்டு சூட்டுடன் கொழும்பு போய் ராஜபக்சே, கோத்தபாயக்களுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வர்த்தக கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர்.

ஆக, புலம்பெயர் அமைப்புகளின் வேர்களை கலகலக்க வைத்த ராஜபக்சேவால், நெருங்கவே முடியாத இடமாகத் திகழ்வது தமிழகம்தான். இங்கே இன்னும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த கோரத்தின் தாக்கம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் தமிழக முதல்வரும் முழுமையாக ராஜபக்சே மற்றும் அவருக்கு ஆதரவு தருவோரை எதிர்த்து வருகிறார். மற்ற யாரைக் காட்டிலும் ராஜபக்சேவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது ஜெயலலிதாதான்.

தமிழகத்தில் தன் ஆதரவுத் தளத்தைப் பதிக்க அரசியல் பயன்படாது என்பதைப் புரிந்து கொண்ட ராஜபக்சே, சினிமா மூலம் அதைச் சாதிக்க முனைந்துள்ளார்.

அதன் முதல் கட்டமாகவே தனது வர்த்தக கூட்டாளியான லைக்கா மொபைல்காரர்களை அய்ங்கரன் கருணா மூலம் கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன முணகல்கள் எழுந்ததோடு சரி. இப்பதோது சர்வம் லைக்கா மயம். முதல் படமே விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி. போதாக்குறைக்கு ஏ ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட லைக்கா நிறுவனத்தின் பிஆர்ஓவாகவே மாறியிருக்கிறார்.

லைக்கா புரொடக்ஷனில் படம் பண்ண இளம் இயக்குநர்கள், பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம் ஏஆர் முருகதாஸ். அதுமட்டுமல்ல, பிரபல நிறுவனங்களுடன் லைக்காவும் இணைந்து பெரிய படம் பண்ண தயாராக உள்ளது என்று பேசி வருகிறார். லைக்காவுடன் தன் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் படம் பண்ணும் என்று கூறிவருகிறார் முருகதாஸ்.

இன்னொரு பக்கம் சிங்கள சினிமாவையே தமிழகத்தில் திரையிட, தன் முகவர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்சே. அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் சொன்னபோது, சினிமா வேறு இனப்பிரச்சினை வேறு என்று வெட்டி நியாயம் பேசி, அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறது அறிவு ஜீவிகள் எனும் பெயரில் வக்கிரங்களைப் படைக்கும் ஒரு கூட்டம்.

ஆக தமிழ் சினிமாவில் ராஜபக்சேவின் முதல் முயற்சி மகா வெற்றிகரமாக நிறைவேறிய, மகிழ்வோடு மேலும் மேலும் கோடிகளைக் கொட்டத் தயாராகி வருகிறார்கள் லைக்கா மாதிரி நிறுவனங்கள், தமிழர் போர்வையில் சிங்களத்துக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் வியாபாரிகள்!

சொல்வதற்கில்லை.. இன்று டெல்லிக்கு வந்து பெண்களுடன் ஆனந்தக் குளியல் போட்டு கும்மாளமாய் திரும்பிய நாமல் ராஜபக்சேவை வைத்து, நாளை பிரமாண்டமாய் ஒரு தமிழ்ப் படம் உருவாகலாம்... அதை முருகதாஸ்கள் பெருமிதத்தோடு இயக்கவும் செய்யலாம்.

நேற்றிருந்தவர் இன்றில்லாததுதானே சினிமா உலகம்!

 

நடிகைகளுக்கு நான் பாடும் வாய்ப்பு தரவே மாட்டேன்! - இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன்

சென்னை: நடிகைகளுக்கு நான் ஒருபோதும் பாடும் வாய்ப்பைத் தர மாட்டேன் என்று இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் கூறினார்.

தமிழ் பட உலகில் நடிகைகள் பலர் பாடகிகளாகி வருகின்றனர். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், சினேகா என பல நடிகைகள் சினிமாவில் பின்னணி பாட ஆரம்பித்துவிட்டனர்.

நடிகைகளுக்கு நான் பாடும் வாய்ப்பு தரவே மாட்டேன்! - இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன்

மேலும் பல நடிகைகளும் பாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இது தொழில் முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு பெரும் பாதகமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் இந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "படங்களில் நடிகைகளை பாட வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆனால் நான் அவர்களைப் பாட வைக்க மாட்டேன். பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் டப்பிங் பேசவே தெரியவில்லை. வேறு டப்பிங் கலைஞர் குரல் கொடுக்கிறார். ஆனால் பாடல் பாட மட்டும் வந்துவிடுகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் அவர்களை பாட வைத்து விடலாம். ஆனாலும் அப்பாடலில் ஜீவன் இருக்காது.

திறமையான பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்பளிக்க இணையதளத்தில் குரல் வங்கியொன்றை தொடங்கியுள்ளேன்," என்றவரிடம், ஏன் இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டீர்கள் என்று கேட்டபோது, "பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தேன். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே போன்ற படங்களை இயக்கினேன்.

தற்போது இயக்குவதை நிறுத்தி வைத்து விட்டு முழு நேர இசையமைப்பாளராக இறங்கியுள்ளேன். இனிப்பு காரம் மற்றும் அங்காடி தெருவின் கன்னட ரீமேக் படங்களுக்கு இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்," என்றார் எஸ்எஸ் குமரன்.

 

ஜித்தன் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது... ரமேஷே நடிக்கிறார்!

சென்னை: வெற்றி பெற்ற திரை படங்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் வெளியாவது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும் விஷயமாகிவிட்டது.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்திரி மகன் ரமேஷ் நடித்த படம் ஜித்தன். அந்தப் படம் தந்த அறிமுகத்தால் அவர் பெயரே 'ஜித்தன்' ரமேஷ் ஆகிவிட்டது.

ஜித்தன் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது... ரமேஷே நடிக்கிறார்!

இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன்2'.

ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குனர் இந்தப் படம் மூலம் அறிமுகமாக , ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் 'ஜித்தன் 2' படத்தில் இரண்டு நாயகிகள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும்.

மேலாண்மை கல்வியில் தங்கபதக்கம் வென்றவர் இயக்குனர் ராகுல்.

'படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், சரியான முறையில் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இன்றைய காலகட்டத்தில் சவாலான சூழ்நிலை . எனவே என் படிப்பும் அனுபவமும் அதை திறம் பட செய்ய உதவும் என நம்புகிறேன்," என்கிறார்.

 

ட்விட்டரில் பவர்ஸ்டார் பண்ணிய குசும்பை பார்த்தீர்களா?

சென்னை: பவர்ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் இரண்டு புகைப்படங்களை போட்டு தனது குசும்புத்தனத்தை காட்டியுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவர்ஸ்டார் சீனிவாசனை கலாய்த்திருப்பார். ஒரு காட்சியில் சந்தானம் பவரிடம் நானாவது காமெடியன் என்று தெரிந்து இருக்கிறேன் ஆனால் உனக்கு அது தெரியாமல் உள்ளது என்பார்.

பவரிடம் உள்ள ப்ளிஸ் பாயிண்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் கலாய்த்துக் கொள்ளுங்கள், நக்கலடியுங்கள் நான் கண்டுகொள்ளவே மாட்டேன். அதன் மூலம் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் மனிதர்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமலினி முகர்ஜி ஜோடி போட்டோவையும், தானும், ரேகாவும் ஜோடியாக நிற்கும் போட்டோவையும் போட்டு இதில் யார் அழகான ஜோடி என்று கேட்டிருக்கிறார். போட்டோவில் கமல் ஜோடியை ஆப்ஷன் ஏ என்றும், தனது ஜோடியை ஆப்ஷன் பி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அழகான ஜோடியை தேர்வு செய்யுமாறு கூறி இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார். விந்தை என்னவென்றால் இரண்டு ஆப்ஷனுமே பி தான். அப்படி என்றால் பவர், ரேகா ஜோடி தான் அழகு என்கிறார்.

 

திருமணம் எனும் நிக்காஹ் யாரையும் காயப்படுத்தும் படமல்ல- ஆஸ்கார் ரவிசந்திரன்

திருமணம் எனும் நிக்காஹ் எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எடுக்கப்பட்ட படமல்ல, என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை வெளியிட இஸ்லாமி சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் 'திருமணம் எனும் நிக்காஹ்'.

யாராக இருந்தாலும் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும், நண்பர்கள் இடையே ஆகட்டும், நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும், நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும் எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த 'புரிதல்' அவசியம்.

'திருமணம் எனும் நிக்காஹ்' மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும். இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டன. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அதற்கு பிறகோ 'திருமணம் எனும் நிக்காஹ்' வெளியாகும்."

-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

லிங்காவில் ஒரு ரஜினி கலெக்டர்.. இன்னொருவர் முரட்டு வில்லன்!

லிங்கா படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ரஜினி, ஒன்றில் கலெக்டராகவும் மற்றொன்றில் முரட்டு வில்லனாகவும் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

லிங்காவில் ஒரு ரஜினி கலெக்டர்.. இன்னொருவர் முரட்டு வில்லன்!

இதில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். ஒன்றில் கலெக்டராக நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் முரட்டு வில்லனாக வருகிறார் ரஜினி.

ஒரு பகுதி முழுவதையும் பிரிட்டிஷ் கால ஆட்சியில் நிகழ்வதைப் போலவும், மறுபகுதியை நவீன காலத்தில் நிகழ்வது போலவும் படமாக்கி வருகிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

ஹைதராபாதில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து ரஜினி வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை எடுத்துள்ளனர்.

 

பாகுபலியில் தமன்னா... முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இயக்குநர் ராஜமவுலி பிரமாண்டமாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. இவர் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிவரும் படம் பாகுபலி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கின்றனர்.

தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்த ராஜமவுலி, கோடைக்காலம் என்பதால் சில தினங்கள் படக்குழுவுக்கு விடுமுறை அளித்திருந்தார்.

பாகுபலியில் தமன்னா... முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றிற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் ராஜமவுலி. தமன்னா வருகையுடன் பாகுபலி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்காக ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவிலும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகளை நடத்தவிருக்கிறார் ராஜமவுலி.

அடுத்த ஆண்டு கோடையில் பாகுபலியை தெலுங்கு, தமிழில் பார்க்கலாம்!

 

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு இணையதளம்: சல்மான்கான் தொடங்கினார்

டெல்லி: நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாக புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

பீயிங் ஹூமன்(Being human) என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்திவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், வேலையில்லாமல் இருக்கும் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் தொடக்கமாக அவர் பீயிங் ஹூமன் அமைப்புடன் இணைந்து ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு இணையதளம்: சல்மான்கான் தொடங்கினார்

இதனை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருக்கும் தனது தொழில் ரீதியிலான நண்பர்களின் உதவியோடு செயல்படுத்தி உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள சல்மான் கான், "ஃபேஸ்புக் என்பது வெறும் பொழுதுப்போக்குக்கானது அல்ல, அதனை பயனுள்ளதாக உபயோகித்தால் வாழ்வில் உயர்வு பெற முடியும். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இது தொடர்பாக நான் எனது நண்பர்களுடன் பேசியுள்ளேன். அவர்களை எனது ரசிகர்களின் திறமைக்கு ஏற்ப வேலை தரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று கூறி உள்ளார்.

நல்ல முயற்சிதான்... எல்லா நடிகர்களும் பின்பற்றலாமே?

 

ஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம்.

படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவே இதனை வீடியோவில் அறிவித்துள்ளார்.

கடந்த மே 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது கோச்சடையான். தமிழில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் பரவாயில்லை எனும் அளவுக்கு வசூல் அமைந்தது. ஆனால் இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

ஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு

தமிழகத்தில் 50 வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். சென்னையில் 40 அரங்குகளில் இன்னும் படக் காட்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் படத்தை ஆன்லைனில் நாளை ஜூன் 28-ம் தேதி வெளியிட தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் படத்தை நாளை காணலாம்.

ஏற்கெனவே கோச்சடையான் படத்தின் திருட்டு வீடியோ இணையங்களில் வெளியாகிவிட்டது. அதை அவ்வப்போது தடுத்து வந்தார்கள். இதைவிட நாமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் வருமானமாவது வருமே என்ற நினைப்பில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

 

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

மும்பை: நெஸ் வாடியா தன்னை பலாத்காரம் செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டிய தினத்தில், ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்ததையும், அதனால் காயமடைந்து வீங்கியிருந்ததையும் நான் பார்த்தேன் என ஒரு சாட்சி வாக்குமூலம் தந்துள்ளார்.

தனது முன்னாள் காதலனும், கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் மீதான விசாரணையை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

பலர் முன்னிலையில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், 3 முறை அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறினார். 14 சாட்சிகளின் பெயர்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மே 30-ந்தேதி மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றிய கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மைதானத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் 172 முறை சுழன்று காட்சிகளையும் பதிவு செய்துள்ளன. 5 கண்காணிப்பு கேமராக்கள் பிரீத்தி ஜிந்தா அமர்ந்து இருந்த பகுதியில் இருந்தன. அனைத்து கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் பிரீத்தி ஜிந்தாவின் குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டுள்ள சாட்சிகளுள் ஒருவரான ஜெய் கனோஜியா அளித்துள்ள வாக்கு மூலத்தில், 'குறிப்பிட்ட நாளில் ப்ரித்தி ஜிந்தாவின் கையைப் பிடித்கு நெஸ் வாடியா இழுத்ததைப் பார்த்தேன். இதனால் அவர் கை மற்றும் தோளில் காயமும் வீக்கமும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால் அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை கேட்க முடியவில்லை,' என்றும் கூறியுள்ளார்.

மற்ற சாட்சிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.

 

உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு!

இணையவெளியில், பொது வெளியில் இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் உள்ள மாபெரும் ரசிகர்களின் எண்ணிக்கையை நாடறியும்.

இவர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் இணைத்து, சமூக நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் இசைஞானி ரசிகர்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார் இளையராஜா.

உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு!

இணையவெளியில் இயங்கும் ரசிகர்களுக்காக 'இசைஞானி பேன்ஸ் க்ளப் குளோபல்' எனும் இணைய தளத்தை அவருக்காகத் தொடங்கினார்கள்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு அமைப்பை இசைஞானியே தொடங்கிய பின்னும், இணைய வெளியில் இருக்கும் ரசிகர்கள் இசைஞானி பெயரில் தனித் தனி சமூக வலைதளப் பக்கங்கள் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வம் இல்லாமலேயே, 'இது இசைஞானியின் அதிகாரப்பூர்வப் பக்கம்' என்னும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இசைஞானியின் பெயரில் தனித்தனிக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரும், இனி இயங்க வேண்டிய தளம் 'இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (Isaignani Fans Club Global - IFCG)' என்ற பக்கம்தான். தன் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் இளையராஜா.

இதோ அவரது அழைப்பு வார்த்தைகளாகவும் காணொளியாகவும்...

அன்பு ரசிகப் பெருமக்களே... உங்களில் பலர் அதிகாரப்பூர்வமான என்னுடைய இணையதளம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, என்னுடைய அதிகாரம் இல்லாமலே, அதிகாரமற்ற முறையில் நீங்கள் பல வருடங்களாக இந்த இணையதளத்தை குழுமங்களாக நடத்தி வருகிறீர்கள்.

உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வது, நீங்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கின்ற காரணத்தால், என் பெயரை வைத்து உங்களை நீங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து கொண்ட காரணத்தால், உங்களை நான் கேட்டுக் கொள்வது, என்னுடைய இணையதளத்தின் கீழ் நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இணையதளம் இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (IFCG).

-இவ்வாறு இசைஞானி தன் காணொளிப் பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர் மன்றம் தொடங்கிய அடுத்த மாதமே இளையராஜாவின் பிறந்த நாள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை 71001 மரக் கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டனர் அவரது ரசிகர்கள். உலகின் பல நாடுகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைந்தனர். இதுபோன்ற சமூக நல நடவடிக்கைகளில் இறங்க, அனைத்து ரசிகர்கள் ஒருமித்து செயல்படுவது அவசியம் என்று இளையராஜா தெரிவித்தார்.

 

அஸாருதீன் மனைவியின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்!

மும்பை: முன்னாள் நடிகையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸாருதீனின் மனைவியுமான சங்கீதா பிஜ்லானியின் வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகியுள்ளார் நடிகர் ஷாருக் கானின் வாகன டிரைவர்.

அவரது பெயர் ராஜேந்திர கெளதம் எனப்படும் பின்டு மிஸ்ரா. 34 வயதாகிறது. புதன்கிழமை மாலையில் இவரை பந்த்ரா போலீஸார் கைது செய்தனர்.

ஷாருக் கானின் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாராம் பின்டு. தனிப்பட்ட ஓட்டுநராக இதுவரை பணியாற்றியதில்லையாம். அதேசமயம், ஷாருக்கின் குழந்தைகளை வீட்டுக்கும், பள்ளிக்கும் கூட்டிச் செல்வது இவரது வேலை என்றும் கூறப்படுகிறது.

அஸாருதீன் மனைவியின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்!

ஷாருக் கானின் ஓட்டுநர் என்று கூறி அந்த வேலைக்காரப் பெண்ணிடமும் அறிமுகம் செய்து கொண்டு பழகியுள்ளார் பின்டு. அந்தப் பெண் மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சேர்ந்தவர். மும்பையில் தங்கி சங்கீதா வீட்டில் வேலை பார்த்து வந்தார். அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 17 என்று கூறப்படுகிறது. ஷாருக் கான் வீட்டில் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டிப் பழகியுள்ளார். பின்னர் அவரை நலோஸ்போராவில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளாராம்.

இந்த காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறை வேலைக்காரப் பெண்ணின் எண்ணுக்கு தொலைபேசி செய்துள்ளார் பின்டு. அப்போது சங்கீதா பிஜ்லானியே பேசியுள்ளார். அப்போதுதான் தனது வேலைக்காரப் பெண் வேலையை விடவிருப்பது குறித்து அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கி விட்டாராம்.

இதனால் வேறு வழியில்லாமல் பின்டுவை நம்பி வந்துள்ளார் அப்பெண். அதைப் பயன்படுத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் பின்டு.

தற்போது போலீஸார் பின்டு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

'ஹார்லிக்ஸ் மாமா' நடிகர் முரளி தற்கொலை

சென்னை: ஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. இவரது இயற்பெயர் பாலமுரளி மோகன்.

இன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும், இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

'ஹார்லிக்ஸ் மாமா' நடிகர் முரளி தற்கொலை

அள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் கலக்கியிருப்பார்கள். 'ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..' என்று விவேக் வசனம் பேசுவது இதில்தான்.

முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு.

என்ன காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

 

விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

சென்னை: கத்தி படப்பிடிப்பை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை வேறு இடத்தில் நடித்த வேண்டியதாகிவிட்டதாம்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கத்தி. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த முருகதாஸ் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தினார்.

விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மூன்றாவது நாள் படப்பிடிப்பை இங்கு எல்லாம் நடத்தக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகள் திடீர் என்று தெரிவித்துவிட்டார்களாம். விமான நிலையத்தில் முருகதாஸ் ஒரு பாடல் காட்சியை வேறு படமாக்க நினைத்திருந்தார். இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி இடத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதி பெற்று அங்கு சென்றுவிட்டார். முன்னதாக கடந்த மாதம் சென்னை விமான நிலையத்தில் முருகதாஸ் கத்தி படத்தின் சில காட்சிகளை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், நந்திதா, காளி, ராமதாஸ்

ஒளிப்பதிவு: பிவி சங்கர்

இசை: சீன் ரோல்டன்

தயாரிப்பு: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: ராம்


மக்களுக்கான ஒரு செய்தியை பிரச்சார நெடியின்றி சொல்வதற்குப் பெயர்தான் கலை. முண்டாசுப்பட்டியில் அந்தக் கலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு மூட நம்பிக்கை. யாராவது போட்டோ எடுத்துக் கொண்டால் பொசுக்கென்று செத்துப்போய்விடுவார்கள் என்று. ஏன்... 1947-ல் நடந்த ஒரு ப்ளாஷ்பேக் சம்பவம். ஒரு வெள்ளைக்காரர் அந்த ஊருக்கு வருகிறார். ஊர் மக்களை போட்டோ எடுத்துச் செல்கிறார். அடுத்த சில நாட்களில் பல நோயில் விழுந்து இறக்கின்றனர்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்  

அன்று முதல் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை அந்த ஊர்க்காரர்கள்.

இப்படியிருக்க, அந்த ஊர் மக்களின் குலதெய்வ சிலையை திருட வருகிறது ஒரு கும்பல். சிலையைத் திருடிக்கொண்டு போகும்போது, ஒரு எரிகல், சாமி சிலை இருந்த இடத்தில் விழுகிறது. தங்கள் குல தெய்வம்தான் வானத்திலிருந்து கல்லாக விழுந்தது என நம்புகிறார்கள் மக்கள்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

எரிகல் விழுந்ததை அறிந்த வெள்ளைக்காரர் மறுபடியும் முண்டாசுப்பட்டிக்கு வருகிறார். 'வந்துட்டானா மறுபடியும் போட்டோ எடுக்க..' என்று வெறியோடு அவரை அடித்து விரட்டுகிறார்கள் மக்கள். தப்பித்துச் செல்லும் வெள்ளைக்காரர் அந்த எரிகல்லின் ஒரு சிறு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறார்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

அதை ஆய்வு செய்ததில், அந்த கல் விலைமதிக்க முடியாத கனிமப் பொருள் என்பதைக் கண்டறிகிறார்.

இப்போது 1983-க்கு வருகிறது கதை. போட்டோக் கடை வைத்திருக்கும் விஷ்ணுவுக்கு ஒருநாள் முண்டாசுப்பட்டி கிராமத்தில் சாகக் கிடக்கும் பெரியவரை படமெடுக்கச் சொல்லி அழைக்கிறார்கள். பணத்துக்காக அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பன் காளியுடன் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு நந்திதாவைப் பார்க்கும் விஷ்ணு, அவள்தான் இறக்கப் போகும் ஊர் தலைவரின் பேத்தி என்பதையும் அறிகிறான். ஆனால் பெரியவர் இறந்தபிறகுதான் அவரை படம் எடுக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிக்க, அங்கேயே தங்குகிறார்கள். அப்படியே நந்திதாவிடம் காதலைச் சொல்கிறான் நாயகன். நந்திதா மறுத்துவிட, விஷ்ணுவின் ஒருதலைக் காதல் தொடர்கிறது.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

பெரியவர் இறந்ததும் அவரது உடலைப் படமெடுக்கிறார் விஷ்ணு. ஆனால் போய் பிரிண்ட் போட்டால், பெரியவர் படமே பதிவாகவில்லை. பதறிப் போய், முனீஷ்காந்த் என்வரை தாஜா செய்து, பெரியவர் மாதிரி வேஷம் போட்டு படமெடுத்து கொண்டு போய் நந்திதா வீட்டில் தருகிறார்கள். அப்போதுதான் செத்துப்போன பெரியவரின் தம்பி மகன்தான் இந்த முனீஷ்காந்த் என்று தெரிகிறது.

போட்டோ மூட நம்பிக்கை, விண்கல் திருடும் முயற்சி, முனீஷ்காந்திடம் மாட்டிக் கொள்ளும் விஷ்ணு - காளி... இந்த மூன்று விஷயங்களும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதுதான் மீதிக் கதை.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

விஷ்ணுவுக்கு வித்தியாசமான வேடம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் குரல் உச்சரிப்பு எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதுதான் அவரது மைனஸ். பழைய நடிகர் சுதாகர் கெட்டப்பில் அச்சு அசலாக 80களின் இளைஞரை விஷ்ணு உருவில் பார்க்க முடிந்தது.

நந்திதா பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி அத்தனை அடக்கமாக, இயல்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட, இதில் பளிச்சென்று அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

காளிக்கு இதில் பிரதான வேடம். கலக்கி இருக்கிறார். அவரும் விஷ்ணுவும் சேர்ந்து படத்துக்கு தனி காமெடியனே தேவையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

அப்புறம்.. அந்த முனீஷ்காந்த் என்கிற ராமதாஸ். வெளுத்துக் கட்டிவிட்டார். இனி சந்தானம், சூரிக்கு கொஞ்சம் டல்லடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு காமெடியில் ரகளை பண்ணியிருக்கிறார்.

பிவி சங்கரின் ஒளிப்பதிவு, சீன் ரோல்டனின் இசை, இரண்டுமே படத்துக்கு பலம்.

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

முன்பாதி கொஞ்சம் ஆமை வேகத்தில் இருந்தாலும், க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க நகைச்சுவையே படத்தில் பிரதானமாகிவிடுவதால், சிரிப்பு வாயும், மலர்ந்த முகமுமாக வெளியில் வருகிறார்கள் பார்வையாளர்கள். அதுதான் இயக்குநர் ராமுக்குக் கிடைத்த வெற்றி!

 

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

பிரகாஷ் ராஜ் இயக்கிய உன் சமையலறையில் படம் கேரளாவில் இளையராஜா ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

பிரகாஷ் ராஜ், சினேகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த படம் உன் சமையலறையில். தெலுங்கு, கன்னடத்திலும் வெளியானது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போனது. ஆனால் கன்னடத்தில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

படத்தின் சிறப்புகளில் ஒன்றாக இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் குறிப்பிட்டிருந்தனர் மீடியா விமர்சனங்களில்.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

இந்தப் படத்தை கேரளாவில் வெளியிட வேண்டாம் என்றுதான் பிரகாஷ்ராஜ் முடிவு செய்திருந்தார். ஆனால் இளையராஜாவுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்தப் படத்தை அவர் இசைக்காகவே கேரளாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

இளையராஜாவின் இசைக் காவியம் என்ற முத்திரையோடு போஸ்டர்களை அடித்து அங்கு விளம்பரப்படுத்தியுள்ளனர் இந்தப் படத்தை.

 

ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: இயக்குநர் கவுதமன்

ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: இயக்குநர் கவுதமன்

சென்னை: தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை இல்லாததால் கலந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார்.

அரசு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார். மருத்துவம்தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் 1996ஆம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது. இதனால் நந்தினி போன்ற பல மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து இன்றுவரையிலும் அகதியாக வளரும், வாழும் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு முதல்வர் விரைந்து தீர்வு காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில்வாடும் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும், கல்வியும் கிடைக்க வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும்.

எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை கலைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நந்தினியின் கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

2 நடிகையும் சேர்ந்து நடிக்கையில் என்ன பூகம்பம் வெடிக்குமோ: பயத்தில் தயாரிப்பாளர்கள்

சென்னை: ஏ.ஜே. நடிகர் நடித்து வரும் படத்தில் 2 நாயகிகளும் ஒருசேர தோன்றும் காட்சியை படமாக்கும்போது என்ன பிரச்சனை வரப் போகிறதோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

மேனன் இயக்குனரின் படத்தில் ஏ.ஜே. நடிகர் நடித்து வருகிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் 2 நாயகிகள். அதில் உயர்ந்த நடிகைக்கு காதல் செய்வதும், டூயட் பாடுவதும் தான் வேலையாம். இரண்டாவது நாயகியான மூனுஷாவுக்கு வலுவான காதபாத்திரமாம்.

இதை அறிந்த உயர்ந்த நடிகை ஏ.ஜே.விடம் கூற அவரோ இயக்குனரிடம் இரண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். நடிப்பவர்களிடம் கதை என்ன என்பதையே கூறாத இயக்குனரிடம் போய் உயர்ந்த நடிகை மொத்த ஸ்கிரிப்ட்டையும் கேட்டுள்ளாராம்.

இந்நிலையில் 2 நாயகிகளும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்க உள்ளார்களாம். அப்போது என்ன பூகம்பம் வெடிக்குமோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம்.

 

சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!

ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சிகப்பு என்ற படத்தை இயக்குநர் - நடிகர் ராஜ்கிரண் வாங்கி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இந்த வாங்கி வெளியிடலின் பின்னணியில் ஒரு பைனான்ஷியல் இழுபறி நடந்திருக்கிறது.

சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!

புன்னகைப்பூ கீதா... இவர்தான் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தவர். இவருக்கு படங்களில் நடிக்க வேண்டும், அதுவும் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நீண்ட நாளாக ஆசை. விமலை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டார். ஜோடியாக தானே நடிப்பதாகக் கூறினார். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விமல், ஜோடியாக வேறு நடிகையை போடச் சொல்லிவிட்டார்.

உடனே கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக்கி, சமுத்திரக்கனியை இன்னொரு ஹீரோவாக்கினார்கள். கனிக்கு ஜோடியாக புன்னகைப் பூ கீதா. இந்தப் படத்துக்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்று தலைப்பிட்டனர். படம் தயாரிக்கும் பொறுப்பை மணிரத்னத்தின் உறவினர் சீனிவாசனிடம் ஒப்படைத்தார் கீதா.

இந்த நேரத்தில் கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கிக் கொண்டிருந்த சிகப்பு படத்துக்கு நிதிச் சிக்கல். தயாரிப்பாளர் முக்தா கோவிந்த் உடனே, புன்னகைப் பூ கீதாவை அணுக, அவர் தன் படத்துக்காக வைத்திருந்த பணத்திலிருந்து ரூ 2 கோடியைக் கொடுத்திருக்கிறார். சிகப்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முக்தா கோவிந்த் மரணமடைந்துவிட்டார்.

இப்போது, கீதா தான் கொடுத்த பணத்தைக் கேட்க, முக்தா கோவிந்த் குடும்பத்தினரோ, பணம் இல்லை.. இந்தப் படத்தை நீங்களே வாங்கி வெளியிடுங்கள் என்று கூறிவிட்டார்களாம். ஆனால் அதற்கு கீதா ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த சிக்கல்களை அருகிலிருந்து பார்த்த ராஜ்கிரண், படம் நன்றாக வந்திருப்பதால், தானே வாங்கி வெளியிட முடிவு செய்தாராம்.

 

விதிமீறி பிரசாரம்… திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் குயிலி ஆஜர்

திருவாரூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திருத்துறைப்பூண்டியில் விதிமுறைகளை மீறி பேசிப் பிரசாரம் செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள அதிமுக நடிகை குயிலி, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

திருத்துறைப்பூண்டியில் ஏப்ரல் 24ம் தேதி நடிகை குயிலி பிரச்சாரம் செய்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி பல பகுதிகளில் இவர் பிரச்சாரம் செய்தார்.

விதிமீறி பிரசாரம்… திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் குயிலி ஆஜர்

இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மே 15ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.

இதைத் தொடர்ந்து இன்று திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன், என மறைந்த இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து சென்றுள்ள கவிஞர் வைரமுத்து, ராம நாராயணன் மறைவு செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன், அங்கிருந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இயக்குநர் ராம நாராயணன் மறைவு இன்று என் பகல் மீது கறுப்பு வண்ணம் பூசிவிட்டது. கலங்கித்தான் போனேன். என் பேச்சுத்துணை ஒன்று போய்விட்டது. திரை உலகின் ஒரு சில உண்மை விளம்பிகளுள் ஒருவர் மறைந்துபோனார். நூறு படங்களுக்கு மேல் இயக்கி சில ஆயிரம் குடும்பங்களுக்குத் தொழில் தந்த ஒரு தயாரிப்பாளரை இழந்துவிட்டது திரை உலகம்.

வாழ்வின் இறுதி நாட்களில் நாள்தோறும் என்னோடு பேசினார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய்த் திகழவேண்டும் என்ற மோசமான முடிவால் அவர் அடைந்த துன்பங்களை நான் அறிவேன். ஆனால் பிறரைப் பழிக்காத பேராண்மை அவரிடம் நிறைந்திருந்தது.

துயரப்பூக்களைத் தூவுகிறேன்

என்னை ஏவி.எம்.மில் அறிமுகம் செய்தவர் அவர்தான். என்னை ஒரு பாடல் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததும் அவர்தான். பாட்டுவரிகளின் நுட்பம் கூறும் செப்பம் அவருக்கு வாய்த்திருந்தது.

கண்ணுக்குத் தெரியாமல் பலபேருக்கு உதவி செய்திருக்கிறார். ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று குமுறுகிறது நெஞ்சு. அவர் உடல் மீது மலர் தூவ முடியாமல் கடல் தாண்டி நானிருக்கிறேன். என் துக்கம் சுமந்து என் பிள்ளைகள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன். உங்களை என்றும் மறக்காதவர்களின் சிறு கூட்டத்தில் ஒருவனாய் நானுமிருப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சூறையாடல் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா, ஜெயன், ஜாக் ஜெகன்

ஒளிப்பதிவு: அகிலேஷ்

இசை: மிதுனேஸ்வர்

தயாரிப்பு: திரிலோக் புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: தாமரைக் கண்ணன்

சினிமாவுக்கே உரிய ஒப்பனைகள், பிரமாண்டங்கள், நாடகத்தனங்கள் ஏதுமின்றி வந்திருக்கும் படம் சூறையாடல். ஒரு கிராமத்துக்குள் நுழைந்து, அந்த வாழ்க்கையை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம். தாயைக் கொன்ற தகப்பனைப் பிரிந்து தங்கை லீமாடன் தனி வீட்டுக்குப் போய்விடுகிறார் ஸ்ரீபாலாஜி. தனியொருவனாகவே தன் தங்கைக்கு அனைத்தையும் செய்கிறார். தங்கை வாழ்வே தன் வாழ்க்கை என வாழ்பவர், தங்கை பருவமடைந்ததும் தன் நண்பர்களைக் கூட அருகில் சேர்க்காமல் பார்த்துக் கொள்கிறார்.

சூறையாடல் - விமர்சனம்

வில்லன் மருது ஒரு பெண்ணை கெடுத்துக் கொல்வதை நேரில் பார்க்கும் பாலாஜி அவனை போலீசில் சிக்க வைக்கிறார். சிறையிலிருந்து வந்ததும் பாலாஜியைப் பழிவாங்க தருணம் பார்க்கிறான் வில்லன்.

ஒரு முறை வில்லனிடம் சிக்கிய தங்கையை பாலாஜி காப்பாற்ற, அப்போது மயங்கி விழுகிறாள். உடனே மருத்துவமனையில் சேர்க்க, தங்கை கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிர்ந்து போகும் பாலாஜி, இதைப் பற்றி தங்கையுடன் பேசவும் கூசுகிறான். தங்கை மீது ஆத்திரம், யார் காரணமாக இருக்கக் கூடும் என்ற பதைப்புடன் தேடல், நண்பனாக இருக்குமோ என்ற சந்தேகம்... இப்படி கொடுமையான மனநிலையுடன் நாட்களைக் கடத்தும் பாலாஜி, கடைசியில் தங்கையைக் கொன்று, தானும் சாக முடிவெடுக்கிறான்.

இந்த முடிவை அவன் செயல்படுத்தினானா என்பதுதான் மீதிக் கதை.

சூறையாடல் - விமர்சனம்

ஒரு கிராமத்தில் நிகழ்ந்த நிஜக் கதையை கண்முன் பார்ப்பது போல, இயல்பாக, அதே சமயம் கொஞ்சம் முரட்டுத்தனமான திரைக்கதை - காட்சி அமைப்பு.

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் ஸ்ரீபாலாஜிக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது. குறிப்பாக தங்கையின் கர்ப்பத்தை நினைந்து குமையும் காட்சிகள். அந்த இறுதிக் காட்சி.

தங்கையாக வரும் லீமா, பாலாஜியின் காதலியாக வரும் காயத்ரி இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக லீமா. அண்ணன் எதற்கு மலைக்கு கூட்டிச் செல்கிறான் என்ற உண்மை புரியாமல், குதூகலத்துடன் அந்த சின்னப் பெண் நடந்து போகும் காட்சியில் மனம் பதைக்கிறது.

நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள், தங்கைக்கு காதல் கடிதம் கொடுக்கும் அந்தப் பையன் என எல்லோருமே அந்த கிராமத்தின் மனிதர்களாகவே தெரிகிறார்கள்.

சூறையாடல் - விமர்சனம்

ஆத்திரம், எதையும் யோசிக்காமல் கை வைக்கும் ஹீரோவின் முன் கோபம் ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையை எப்படி கிழித்துப் போடுகிறது என்பதை இயல்பாகக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அடப்பாவி, குறைந்தபட்சம் வேறு மருத்துவமனையிலாவது காட்டியிருக்கலாமே என பார்வையாளர்களைக் கேட்க வைக்கிறது.

இன்னும் இப்படியெல்லாம் கிராமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர வைக்கின்றன பல காட்சிகள்.

சூறையாடல் - விமர்சனம்

அகிலேஷின் ஒளிப்பதிவில் அழகைவிட, கிராமத்தின் எளிமையும், ஏழ்மையும் மேலோங்கித் தெரிகின்றன. மிதுனேஸ்வரின் இசை உறுத்தாமல் கடந்து போகிறது.

தாமரைக் கண்ணனுக்கு இது முதல் படம். இயல்பான காட்சியமைப்பும், சினிமாத்தனமில்லாத வசனங்களும் படத்தைப் பார்க்க வைக்கின்றன.

 

ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

மும்பை: யுத் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப் பச்சன் செய்த குறும்பால் நடிகை சரிகா கண் கலங்கிவிட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸனின் முன்னாள் மனைவியான சரிகா யுத் என்னும் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்கள்.

ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

இந்த நிகழ்ச்சியில் சரிகா அமிதாபின் முன்னாள் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில் அமிதாப் முகத்தில் சரிகா கோபமாக கதவை சாத்தும் காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது எங்கே ஓங்கி கதவை சாத்தினால் அமிதாபுக்கு அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் சரிதா இருந்தார். அப்போது அவர் கதவை சாத்த அமிதாப் தனக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி வலியால் அலறினார். இதை பார்த்த சரிகா உள்ளிட்ட மொத்த யூனிட்டும் பதறிப் போனார்கள்.

சரிகாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிட்டது. கடைசியில் பார்த்தால் அமிதாப் கதவை திறந்து கொண்டு சிரித்துக் கொண்டே சும்மா விளையாடினேன் என்றார்.

 

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை: இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று பிற்பகல் 2-30 மணி அளவில் ராம நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

படப்பிடிப்புகள் ரத்து

ராம நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறாது என்றும், இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றன என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்கம்

இதற்கிடையே ராம நாராயணன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர். அதில்,

"திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம நாராயணன் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் 22-6-2014 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

திரையுலகில் மிக அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர், அவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவருடன் பணிபுரியும் சக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிலாளர்களுடன் மிக அன்புடன் பழகக்கூடியவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலையுலகினருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

வடகறி விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜெய், சுவாதி, பாலாஜி, அருள்தாஸ், வெங்கட் பிரபு, சன்னி லியோன், கஸ்தூரி

ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ்

இசை: விவேக் ஷிவா, மெர்வின் சாலமன்

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இயக்கம்: சரவணராஜன்

எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின் தொகுப்பாக வந்திருக்கிறது வடகறி.

சென்னையின் நடுத்தரக் குடும்பத்துப் பையன் ஜெய். ஆட்டோக்கார அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரியுடன் வசிக்கும் அவருக்கு, மெடிக்கல் ரெப் வேலை கிடைக்கிறது. ஒரு நல்ல போன் வாங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் ஒரு கொரியன் செட்தான் வாங்க முடிகிறது. அந்த போனோ, போகிற இடங்களிலெல்லாம் ரிங்டோன் என்ற பெயரில் லவுட்ஸ்பீக்கர் கணக்கில் சத்தம் போட்டுத் தொலைகிறது.

வடகறி விமர்சனம்

ஒருநாள் 'ஆளுக்கு 500 ரூபா போட்டு ஒரு நல்ல போனாவது வாங்கிக் கொடுங்கடா' என வெங்கட் பிரபு கமெண்ட் அடிக்க, அன்று பார்த்து ஒரு ஐபோனை அநாதையாகக் கண்டெடுக்கிறார். திருப்பிக் கொடுக்கலாம் என முயற்சிக்கும்போது, 'தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுடாத மச்சி,' என அட்வைஸ் தருகிறார் பாலாஜி. ஐபோன் இருந்தாதான் பெண்கள் விழுவார்கள் என்ற உபரித் தகவலைத் வேறு தர, திருப்பித் தரும் எண்ணத்தை தள்ளிப் போடுகிறார்.

வடகறி விமர்சனம்

பாலாஜி வீட்டு எதிர்வீட்டில் உள்ள தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் சுவாதியைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜெய். ஆனால், 'அவளுக்கு ஏற்கெனவே ஆள் இருக்கான், நீ அவ ப்ரெண்டை லவ் பண்ணு' என பாலாஜி கொடுத்த யோசனையை நம்பி, தோழியிடம் காதல் சொல்ல முயலும்போதுதான், சுவாதிக்கு காதலன் என யாருமில்லை என ஜெய்க்கு தெரிகிறது.

உடனே, அந்தத் தோழியிடமே சுவாதி மீதான தன் காதலைச் சொல்கிறார். உடைந்து போகும் தோழி, சுவாதியிடம் சண்டைக்குப் போக, வீம்புக்காகவே ஜெய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார் சுவாதி. தன்னிடம் உள்ள ஐபோனைப் பார்த்து மயங்கித்தான் சுவாதி காதலிப்பதாக நம்புகிறார் ஜெய்.

வடகறி விமர்சனம்

இதை சுவாதியிடம் சொல்ல, பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா என வெளுக்கிறார் அவர். சுவாதியின் மனநிலை, எம்ஜிஆர் ரசிகரான தன் அண்ணனின் நேர்மையை நினைத்துப் பார்க்கும் ஜெய், அந்த ஐபோனை உரியவரிடம் திருப்பித் தர முயற்சிக்கிறார். அந்த முயற்சியே அவரை பெரும் சிக்கலில் இழுத்துவிடுகிறது.

அதிலிருந்து ஜெய் தப்பிப்பது மீதிக் கதை!

வடகறி விமர்சனம்

அப்பாவி சென்னை இளைஞன் பாத்திரம் ஜெய்க்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், இந்த வேடத்தை இன்னும் சிறப்பாக ஜெய்யால் செய்திருக்க முடியும். அவரோ, எல்லா காட்சியிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு காட்சி விதிவிலக்கு... வில்லன்களிடம் மிதிபட்டு முகத்தில் ரத்தக் கறையோடு வரும் அவரை, 'அதென்ன லிப்ஸ்டிக்' என சுவாதி கேட்க, அதற்கு ஜெய் காட்டும் ரியாக்ஷன் செம!

சுவாதிக்கு பெரிய வேலையில்லை. 'தெத்துப் பல் தெரிய சிரிக்க வேண்டும்... அப்புறம் கழுத்திலிருந்து கால் வரை முழுவதும் மூடப்பட்ட காஸ்ட்யூமுடன் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும்.. அவ்ளோதான் உங்க போர்ஷன்,' என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர்.

ஆர்ஜே பாலாஜிக்கு இதில் 'சந்தான' வேடம். அதாவது ஹீரோவுக்கு ப்ரெண்ட்! படபடவென ரேடியோவில் பேசுவது மாதிரியே பேசுகிறார். ஜெய் சொல்வது போல, சில நகைச்சுவைக் காட்சிகள் நாளைக்கு சிரித்துக் கொள்ளலாம் ரகம்தான்!

வடகறி விமர்சனம்

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்படும் பாலாஜி, மெதுவாக அந்த கும்பலுடன் நட்பாகும் அந்த மூன்று காட்சிகள், புதுசு.

தோழியாக வரும் பெண், வெங்கட் பிரபு, அந்த வில்லன் குரூப் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மெயின் வில்லன் என்று ஒருவரைக் காட்டும்போது இம்மியளவுக்குக் கூட த்ரில் இல்லை. அதான் தெரியுமே என்கிற மாதிரி ஆகிவிடுகிறது அந்தக் காட்சியில்!

சன்னி லியோன் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார். அதற்கு மேல் அந்தப் பாடல் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

வடகறி விமர்சனம்

சுற்றிச் சுற்றி சென்னையையே காட்டினாலும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு அருமை.

புதிய இசையமைப்பாளர்கள் விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. அந்த செல்போன் கேம் பாடல் புதிதாக இருந்தாலும், இன்னொரு முறை கேட்கும்படி, அல்லது பார்க்கும்படி இல்லை!

வடகறி விமர்சனம்

காதல் காட்சிகளை ரகளையாக அமைத்திருக்கும் சரவண ராஜன், அதே சுவாரஸ்யத்தோடு பின்பாதியில் சம்பவங்களை அமைக்கத் தவறியிருக்கிறார். ஆனால் பொழுதுபோக்குக்கு மினிமம் கியாரண்டி இருப்பதால்... பார்க்கலாம்!

 

இன்று மாலை வாங்கடே ஸ்டேடியத்தில் வாக்குமூலம் அளிக்கும் ப்ரீத்தி: நெஸ் வாடியாவுக்கு சிக்கல்?

மும்பை: தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறிய இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் இன்று மாலை 4 மணிக்கு வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தன்னை தகாத வார்த்தைகளால், திட்டி, கண்ட இடத்தில் தொட்டு, தள்ளிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். உன்னை காணாமல் ஆக்கிவிடுவேன் என்று நெஸ் தன்னை மிரட்டியதாக ப்ரீத்தி தெரிவித்தார்.

இன்று மாலை  வாங்கடே ஸ்டேடியத்தில் வாக்குமூலம் அளிக்கும் ப்ரீத்தி: நெஸ் வாடியாவுக்கு சிக்கல்?

இதையடுத்து அமெரிக்கா சென்ற ப்ரீத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை திரும்பினார். இந்நிலையில் சம்பவம் நடந்த வாங்கடே ஸ்டேடியத்தில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு ப்ரீத்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கிறார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நெஸ் வாடியாவுக்கு சம்மன் அனுப்பப்படும்.

இதற்கிடையே ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் வாடியா குழுமம் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ்ஸின் தந்தை நுஸ்லி வாடியாவை மிரட்டினார். இதையடுத்து நுஸ்லி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு வாடியா குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.