சென்னை: மலையாளத்தில் ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்'. இந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குநர், அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார். பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இப்படத்தின் முதல் டிரைலர் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட்டது. தெரிந்த கதைதான் என்றபோதிலும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அதை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதனால் யூடியூப்பில் டிரைலர் அதிக ஹிட் அடித்தது.
இந்நிலையில், பாபநாசம் திரைப்படத்தின் 2வது டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 நிமிடம் 46 விநாடிகள் கொண்டதாக இந்த டிரைலர் அமைந்துள்ளது.
கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட படத்தில் வரும் கேரக்டர்கள் அனைவருமே நெல்லைத் தமிழை அழகாக உச்சரிக்கின்றனர். கமல்ஹாசன் ஒரு காட்சியில் காண்பிக்கும் முக பாவனை சில விநாடிகள் டிரைலரில் அப்படியே ஓடவிடப்பட்டுள்ளது.
மகாநதி திரைப்படத்தில் மகளை இழந்து பரிதாபமாக பார்க்கும் முகபாவனையை போல இதிலும் கமல்தனது பாவனையை காண்பித்துள்ளதாக புகழ்கின்றனர் சமூக வலைத்தளங்களில். இந்த டிரைலரும் மெகா ஹிட் அடிக்கும் என்பதற்கு உதாரணமாக, டிவிட்டரில் இந்திய அளவில் பாபநாசம் திரைப்பட பெயர் டிரெண்ட் ஆகியது.
Post a Comment