சினிமாவில் திரும்பிய பக்கமெல்லாம் வாரிசுகள் ஆதிக்கம்தான். அத்தனை வாரிசுகளும் ஜெயிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.
தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் இயக்குநர் பி வாசுவின் மகன் சக்தி. தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தார்.
ஆனால் நினைத்த உயரத்தை அடைய முடியவில்லை. இப்போது தனது இயற்பெயரான சக்திவேலுடன் அப்பா பெயர் வாசுவையும் இணைத்துக் கொண்டு, சக்திவேல் வாசு என்று மாறியுள்ளார்.
க்னைடாஸ்கோப் நிறுவனம் சார்பாக டாக்டர் எஸ் செல்வமுத்து - என் மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் தற்காப்பு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சக்திவேல் வாசு. ஆர் பி ரவி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார்.
கதை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் நமது எல்லையில் அமைந்துள்ள கர்நாடகாவின் பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
படம் குறித்து இயக்குநர் ரவி கூறுகையில், "மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் அம்சம் கொண்ட கதை இது. தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும்.
மிகவும் புதுமையான கதைக்களம். காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது 'தற்காப்பு'. எப்எஸ் பைசல் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ் ஆனந்த்.
அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வருகிறது.
Post a Comment