வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை படம் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய்.
அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விசாரணை'. இப்படம் வெளிவருதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களையும், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வெனீஸ் திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, விருதையும் வென்றது.
இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் விஜய், படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "விசாரணை படத்தை நான் அமெரிக்காவில் பார்த்தேன். இந்த படம் இந்தியாவில் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக அமையும்.
வெற்றிமாறன் ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நிமிடம் என்னால் பேச முடியவில். கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை அவர் கையாண்டவிதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் ரொம்பவும் இயல்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். இப்படம் எல்லாவிதத்திலும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். உலக சினிமா அரங்கில் இந்த படம் இந்திய சினிமாவுக்கான ஒரு தனி அடையாளமாக இருக்கும்.
சினிமா துறையில் ஒருவனாக இருக்கும் எனக்கு இப்படத்தை முன்கூட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்," என்று கூறியுள்ளார்.
Post a Comment