சூப்பர் ஸ்டார்...
இந்தத் தலைப்பைக் கைப்பற்ற சில மாதங்களுக்கு முன்பு வரை சில தமிழ் நடிகர்கள்தான் பாயைப் பிறாண்டிக் கொண்டிருந்தார்கள் என்றால்.. இப்போது அந்தப் பட்டியலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் சேர்ந்து கொண்டது ரஜினி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
மகேஷ்பாபு சமீபத்தில் நடித்த ஸ்ரீமந்துடு படத்தில் அவர் பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைச் சேர்த்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் ரஜினிகாந்த் பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியை கடந்த பல ஆண்டுகளாகப் போட்டு வருகிறார்கள். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில நடிகர்கள் இளம் சூப்பர் ஸ்டார், அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தங்கள் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ள முனைந்தனர். ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்படிப் பயன்படுத்துவதைத் தடுத்தனர்.
ஆனால் மகேஷ் பாபுவோ தடாலடியாக தன் பெயருக்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டுள்ளார் ஸ்ரீமந்துடு படத்தில். அதன் தமிழ்ப் பதிப்பான செல்வந்தன் படத்திலும் இந்தத் தலைப்பை போட்டுக் கொண்டுள்ளார்.
இதனைக் கடுமையாக எதிர்த்துள்ள ரஜினி ரசிகர்கள், "ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம். சூப்பர் ஸ்டார் என்றால் அவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, ரஜினியை பெரிதும் மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் மகேஷ்பாபு, அவரது பட்டப் பெயரை தனக்குப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் வெட்கக் கேடானாது. இதனை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்," என்று சமூக வலைத் தளங்களில் வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மகேஷ்பாபுவுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கடிதமும் எழுதியுள்ளனர், ஆந்திராவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர்.
Post a Comment