பாலிவுட் பிரபலங்களுக்காக 'ரோபோ' படத்தின் பிரத்யேக காட்சி நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. படம் பார்த்த இந்தி திரையுலகினர், படத்தின் பிரமாண்டம் குறித்து பாராட்டினர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி, உலகம் முழுவதும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் 'எந்திரன்' படத்தின் இந்தி பதிப்பு 'ரோபோ'. இதன் பிரத்யேக காட்சி, முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்காக நேற்று முன்தினம் மும்பையில் திரையிடப்பட்டது. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது.
இதற்காக ரஜினி தனது குடும்பத்துடன் மும்பை வந்தார். பாலிவுட்டின் எவர்கிரீன் ஹீரோ என்றழைக்கப்படும் தேவ் ஆனந்த், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேல், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, சன்னி தியோல், ஆமிர் கான், வினோத் கன்னா, ஓம்புரி, நடிகைகள் நதியா, மாளவிகா, ஊர்மிளா மடோன்கர், சினேகா, ஹேமாமாலினி, இயக்குனர்கள் யாஷ் சோப்ரா, கரண் ஜோஹர் உள்ளிட்டோர் ரோபோ படத்தை கண்டு களித்தனர்.மேலும் வட இந்தியாவில் படத்தை வெளியிட்ட ஜெமினி சர்க்கியூட் மனோகர் பிரசாத், கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர் நம்பிராஜன் மற்றும் பலரும் படத்தை பார்த்தனர். படத்தின் பிரமாண்டம் குறித்து பாராட்டிய பாலிவுட் பிரபலங்கள், சன் பிக்சர்ஸ்&ரஜினி&ஷங்கர் கூட்டணி இந்திய திரையுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டனர். தேவ் ஆனந்த் கூறுகையில், "மிகவும் அற்புதமான படம். இது போன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை. ரஜினி, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை" என்றார்.
வினோத் கன்னா கூறுகையில்,"இந்திய திரையுலகத்தை ரோபோ படத்தின் மூலம் ஹாலிவுட் தரத்துக்கு தயாரிப்பாளர் கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமான படம்" என்றார். ஹேமமாலினி கூறுகையில்,"ரஜினி, ஷங்கரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை" என்றார். "எதிர்ப்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த படம். ரோபோ படத்தின் தமிழ் வெளியீடான எந்திரனை பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காக நான் விரைவில் எனது குடும்பத்துடன் சென்னை செல்வேன்" என்றார் அபிஷேக் பச்சன்.
ஆமிர் கான் கூறும்போது, "இந்திய சினிமாவில் இப்படியும் படம் பண்ணலாமா என்று என்னை பிரமிக்க வைத்து விட்டது ரோபோ" என்றார். இயக்குனர் ஷங்கர் கூறுகையில்,"முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சினிமா துறையில் யாரும் இதுவரை எட்டியிராத மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன் ஒரு பகுதிதான் இந்தப்படம்" என்றார். ரஜினிகாந்த் கூறும்போது, "படம் வெற்றி என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும் படத்திற்கு இந்தளவுக்கு கிடைத்த பிரமாண்டமான வெற்றி என்னை பிரமிக்க வைத்து விட்டது. எனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானது இது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
Source: Dinakaran
Post a Comment