நலமாக இருக்கிறார் ரஜினி, ரசிகர்கள் பயப்பட வேண்டாம் : லதா ரஜினிகாந்த்!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நலமாக இருக்கிறார் ரஜினி, ரசிகர்கள் பயப்பட வேண்டாம் : லதா ரஜினிகாந்த்!

5/19/2011 10:07:11 AM

நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி ‘ராணா’ பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இசபெல் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது.

இதையடுத்து போரூரிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குள்ள 7வது மாடியில் தனி அறையில் அவருக்கு நுரையீரல், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று, ரஜினிக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளிட்ட அறிக்கையில், ‘மூச்சு விடுவதை எளிதாக்கும் விதத்தில் ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது’ என தெரிவிக்கப்பட்டது. நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பிரச்னை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அள¤க்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நலமோடு உள்ளார் ரஜினிகாந்த் : லதா ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நலமோடு உள்ளார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் நேரடி பராமரிப்பிற்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறுப்புகளின் சமநிலையைப் பராமரிக்கவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன என்றும் லதா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு தடை; போலீஸ் குவிப்பு

ரஜினியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் ரசிகர்கள் குவிகின்றனர். 'ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ரசிகர்கள் வர வேண்டாம்' என்று மருத்துவமனை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும், ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உடல்நிலை பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரிவர பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். ரஜினி சிகிச்சை பெறுவது போன்ற போட்டோவையாவது பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் ரசிகர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவர்கள் தகவல்

இந்நிலையில், சுவாசக் கோளாறை குணப்படுத்த ஐசியூ வில் ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொண்டு ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரிலிருந்து ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் : ரசிகர்களுக்கு கோரிக்கை!

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குணமடைந்து வரும் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் வருவதை தடுக்க மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை!

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். திருப்பூரில் "மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்" இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்!  கவிஞர் வைரமுத்து

“ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். மேலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை!

ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment