3 பட நஷ்டம்: ரஜினியை மீண்டும் இழுக்கும் நட்டி!

|

Natty Again Drags Rajini For Movie
3 படப் பிரச்சினை இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நஷ்டம் குறித்து முதல் குற்றச்சாட்டை வைத்தவர், படத்தை தெலுங்கில் விநியோகித்த நட்டி குமார்.

ரஜினிகாந்த் தலையிட்டு, இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இது மீடியாவில் பெரிய அளவு பரபரப்பைக் கிளப்பியது.

ஆனால் உடனடியாக ரஜினி, 'தனக்கும் 3 படத்துக்கும் எந்த வகையிலும் சந்பந்தமில்லை. இதுதொடர்பாக தன்னை இணைத்து செய்தி வெளியிட வேண்டாம். விநியோகஸ்தர்கள் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்," அறிக்கை வெளியிட்டிருந்தார் ரஜினி.

ரஜினி அறிக்கை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட நட்டி குமார், "நான் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. ரஜினி மகள் படம் என்பதால் வாங்கி வெளியிட்டோம்," என்று சமாளித்தார்.

ஆனால் அத்துடன் அவர் நிற்கவில்லை. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரிராஜாதான் காரணம் என ஹைதராபாத் போலீசில் புகார் தந்தார்.

3 பட விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத ரஜினி பெயர் தேவையின்றி மீடியாவில் அடிபட்ட போது கூட அமைதியாகவே இருந்த படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா, நிலைமை விபரீதமாவதை உணர்ந்து இப்போது நட்டி குமாருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் ரஜினி பெயரை இழுக்க ஆரம்பித்துள்ளார் நட்டி குமார்.

அவர் கூறுகையில், "ரூ 6 கோடி கூட தேறாத 3 படத்தை ரூ 80 கோடி வரை விற்றுள்ளனர். இதில் தெலுங்கு உரிமை ரூ 5 கோடி (ஆனால் நட்டிகுமார் இதில் ரூ 2.5 கோடிதான் கொடுத்துள்ளார்). தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்ட 3 படத் தயாரிப்பாளர்கள், ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர். கொலவெறி பாட்டை செலவே இல்லாமல் மலிவாக எடுத்துவிட்டனர்.

இந்தப் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்த வருவதாக வாக்குறுதியளித்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வராமல் ஏமாற்றிவிட்டனர். எனவேதான் இத்தனை பெரிய நஷ்டம். மகள் ஐஸ்வர்யாவுக்கு வங்கியில் இருந்த கடனை ரஜினிகாந்த் அடைத்ததாக நான் கேள்விப்பட்டேன். எனவே 3 பட நஷ்ட விவகாரத்தில் ரஜினி தலையிட்டு சரிசெய்ய வேண்டும்," என்றார்.

சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெரிய சவால் என்று இப்போது புரிகிறதா?
Close
 
 

Post a Comment