பெங்களூர்: விஜய் நடிக்கும் யோஹன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க கன்னட முன்னணி நடிகரும், நான் ஈ படத்தில் அசத்தியவருமான சுதீப்பை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
திறமைகள் பல நிரம்பிய சுதீப் ஒரு வழியாக முழு அளவிலான தென்னிந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். கன்னடத்தில் மட்டுமே கலக்கி வந்த அவர் தற்போது நான் ஈ படத்தின் மூலம் நாடறிந்த நடிகராகி விட்டார்.
நான் ஈ மூலம் கிடைத்த புகழால் தற்போது தமிழில் நேரடியாக நடிக்கும் பட வாய்ப்புகள் சுதீப்பைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.
அதேபோல கன்னடம், தெலுங்கிலும் கூட அவரை நோக்கி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் பாய்ந்தோடி வருகின்றனவாம்.
அதில் முக்கியமானது கெளதம் மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பாம். விஜய்தான் இதில் ஹீரோ. நீண்ட நாட்களாக கிடப்பி்ல உள்ள இப்படத்தை தூசி தட்டி கையில் எடுக்கிறார் கெளதம்.
இப்படத்தை முழுக்க முழுக்க நியூயார்க் மற்றும் பிற நாடுகளில் படமாக்குகிறார் கெளம் மேனன். இதில் ஒற்றன் வேடத்தில் வருகிறார் விஜய். இந்த நிலையில்தான் நான் ஈ படத்தைப் பார்த்த கெளதமுக்கு சுதீ்ப்தான் யோஹன் படத்திற்கு சரியான வில்லனாக இருப்பார் என்ற யோசனை தோன்றியதாம். இதுகுறித்து சுதீப்பிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் சுதீப் இதுகுறித்து உறுதியாக கூற மறுக்கிறார். இதை வதந்தி என்று கூட அவர் கூறுகிறார். தற்போது அவர் பச்சன் என்ற கன்னடப் படத்தில் பிசியாக இருக்கிறாராம். இதில் பாவனா நடிக்கிறார்.
Post a Comment