காதுகளால் 'பார்க்கும்' டேனியல் கிஷ்... தாண்டவம் படத்துக்காக விக்ரமுக்கு பயிற்சியளித்தார்!

|

Echo Location Expert Daniel Kish Thaandavam   

சென்னை: பார்வைத் திறன் இழந்துவிட்டால், இருட்டிலேயே வாழ வேண்டியதுதான் என்ற தியரியை உடைத்திருக்கிறார் டேனியல் கிஷ். அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

எக்கோ லொகேஷன் என்ற புதிய உத்தி மூலம், தன் காதுகளையே கண்களாக்கி, கண் தெரியும் சாதாரண மனிதர்களைப் போல மலைகளில் நடக்கிறார்... அருவியோரங்களை சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்... வாகனங்கள் ஓட்டுகிறார்.

இவரைப் பற்றி கேள்விப்பட்டு, நேரடியாக அமெரிக்கா போய் பேசி, தனது தாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக நடிக்கும் விக்ரமுக்கு பயிற்சி கொடுத்தார்களாம். படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார் டேனியல் கிஷ்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த டேனியல் கிஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், "நான், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். 7 மாத குழந்தையாக இருந்தபோது, ஒரு நோய் தாக்கியதில் ஒரு கண்பார்வை பறிபோனது. 13-வது மாதத்தில் இன்னொரு கண்பார்வையும் பறிபோனது. `ஆபரேஷன்' மூலம் இரண்டு கண்களையும் எடுத்து விட்டார்கள். என்றாலும், என் பெற்றோர்கள், எனக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு, சுதந்திரமாக வளர்த்தனர்.

18-வது வயதில், எல்லா அமெரிக்க இளைஞர்களையும் போல் நானும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். வவ்வால்களைப் போல் காதுகளால் பார்க்கும் திறனை வளர்த்துக்கொண்டு, என்னை நானே கவனித்துக்கொண்டேன். இப்போது கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதன் மூலம் காதுகளால் பார்க்கும் திறனை, பல நாடுகளுக்கும் சென்று கற்றுக்கொடுக்கிறேன்.

`தாண்டவம்' படத்தில் என்னைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக கேள்விப்பட்டதும், சந்தோஷப்பட்டேன். எப்படி நடப்பது, எப்படி ஒலி அலையை காதுகளால் வாங்குவது என்பது பற்றி விக்ரமுக்கு பயிற்சி அளித்தேன். சில நாட்களிலேயே அவர் நன்றாக கற்றுக்கொண்டார்.

நான், அவரை மாணவராகத்தான் பார்த்தேன். நடிகராக பார்க்கவில்லை. விக்ரமின் செல்லப்பெயர், `கென்னி' என்று கேள்விப்பட்டேன். `தாண்டவம்' படத்தில் அதே பெயரில்தான் நடித்து இருக்கிறார். நான், நானாகவே நடித்து இருக்கிறேன்.''கண் பார்வையற்ற ஒருவர், காதுகளையே கண்களாக பயன்படுத்தி, தனது வாழ்க்கையை சிதைத்தவர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் இது. இதில், கண்பார்வையற்றவராக விக்ரம் நடித்திருக்கிறார்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ விக்ரம், இயக்குநர் விஜய், யுடிவி சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Post a Comment