ரூ 22 கோடிக்கு படம் எடுத்துத் தருவதாக உறுதியளித்துவிட்டு, ரூ 43 கோடி வரை இழுத்திவிட்டுவிட்டார் என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மீது புகார் கொடுத்துள்ளனர் தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள்.
நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் தெலுங்கில் 'ரெபெல்' என்ற படத்தை இயக்கினார். பிரபாஸ் - தமன்னா, தீக்ஷா சேத் நடித்தனர். படம் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பசவான், புல்லாரோ ஆகியோருக்கும், லாரன்சுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரூ 22.50 கோடி செலவில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொண்ட லாரன்ஸ், ரூ 42 கோடிக்கு செலவை இழுத்துவிட்டதாகவும், பட்ஜெட்டுக்கு மேல் ஆன தொகையை லாரன்ஸ் தங்களுக்குத் தரவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தயாரிப்பாளர்களுக்கு எதிராக லாரன்சும், இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் தெரிவிக்காமல் படத்தின் டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த சண்டைக்கு காரணமே, படத்தின் தமிழ் உரிமையை தனக்கு எழுதித் தர வேண்டும் என ராகவா லாரன்ஸ் அடம் பிடித்ததுதானாம். ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் உரிமையை தரமுடியாது என தயாரிப்பாளர்கள் கூற, லாரன்ஸ் தன் பங்குக்கு எகிறினாராம். விளைவு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டனர்.
Post a Comment