டைரக்டர் ரவிக்குமாருடன் திருமணம் ரத்து ஆனது ஏன்? என்று நடிகை சுஜிபாலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 'அய்யா வழி', 'கிச்சா வயது 16', 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜிபாலா. தற்போது 'உண்மை' என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கிறார்.
இவருக்கும், 'உண்மை' படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமாருக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதி சுஜிபாலா, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றதாகவும், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சுஜிபாலாவுக்கு விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுஜிபாலா, ''நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பொய்யானது. காய்ச்சல் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விட்டேன். எனக்கும், ரவிக்குமாருக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும்'' என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் நிருபர்களை சந்தித்த ரவிக்குமார், 'சுஜிபாலாவுடனான பிரச்சினையால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக' கூறினார். இது தொடர்பாக நடிகை சுஜிபாலா கூறியதாவது: எங்கள் இருவருக்கும் இடையே சின்ன, சின்ன பிரச்சினைகள் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிய முடிவு செய்தோம். அதன்படி எங்கள் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதால், தற்போது திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.
Post a Comment