சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதென முடிவு செய்துள்ளனர்.
அதற்கடுத்த 4 தினங்கள் கழித்து இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிட்டுக் கொள்ள அனுமதிக்குமாறு கமல் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பேச்சு நடந்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக நாளை நடக்கவிருந்த டிடிஎச் பிரிமியர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம், டிடிஎச் மூலம் ரூ 3 கோடி கூட வசூலாகவில்லை என்பதுதான்.
அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்றனர். 44 அரங்குகள் மட்டும் கமலை நம்பி களமிறங்கி, இப்போது கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் பேச்சு வார்த்தையின் மூன்றாவது நாளான நேற்று அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் ஆகியோரிடம் கமல் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளில் வரும் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். டிடிஎச் சந்தாசாரர்களிடம் வசூலித்த பணத்தை சரிகட்ட, அடுத்த நான்கு நாட்களில் டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதிக்குமாறு கோரியுள்ளார் கமல்.
ஆனால் குறைந்தது 3 வாரங்கள் கழித்துதான் ஒளிபரப்ப வேண்டும் திரையரங்க உரிமையாளர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்களாம். ஆனால் கமலின் நிலையைப் பார்த்த பிறகு, ஒரு வாரம் கழித்து ஒளிபரப்பிக் கொள்ள சம்மதித்துள்ளனர்.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் கழிந்ததும், வார நாளான திங்களன்று படத்தை டிடிஎச்சில் போட்டால் தனக்கு நெருக்கடி குறையும் என கமல் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சம்மதித்துள்ளனர்.
Post a Comment