ஹைதராபாத்: நடிகை அஞ்சலி மாயமான பின்னர் அவரது போனிலிருந்து 18 அழைப்புகள் போயிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒருவர் தெலுங்கு புதுமுக நடிகர் வேணு மல்லாடி என்று தெரிய வந்துள்ளது. அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் தனது சித்தப்பா சூரியபாபவுடன் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்து தப்பி விட்டார். அதன் பிறகுதான் அஞ்சலி விவகாரம் பெரிதாக வெடித்தது.
2 நாட்களுக்கு முன்பு அவர் காலை8 மணியளவில் சித்தப்பாவுடன் தங்கியிருந்த ஹோட்டலை விட்டுவெளியேறினார். பின்னர் சாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திற்குப் போனார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர் பத்தரை மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. தொடர்ந்து மர்மமான முறையில் மாயமாகஇருக்கிறார்.
இந்த நேரத்திற்குள் அவர் 18 பேரிடம் பேசியுள்ளார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரது செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளதாம்.
அமெரிக்க டாக்டர் ஒருவரிடமும், சென்னை அண்ணா நகர் டாக்டர் ஒருவரிடமும் அஞ்சலி பேசியுள்ளார். கடைசியாக அவர் தெலுங்கு புதுமுக நடிகர் வேணு மல்லாடி என்பவருடன் பேசியுள்ளார்.
அதேசமயம், தனது தாயாருடன் அஞ்சலி பேசியதாக தெரியவில்லை என்று போலீஸார் சொல்கிறார்கள். முன்னதாக தனது தாயாருடன் அஞ்சலி பேசியதாகவும், புகாரை திரும்பப் பெறுமாறு அப்போது அறிவுறுத்தியதாகவும் அஞ்சலியின் சகோதரர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி விவகாரம் பெரும் மர்மமாக இருப்பதால் ஆந்திர போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது சென்னை போலீஸிலும் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி புகார் கொடுத்திருப்பதால் சென்னை காவல்துறையினரும் விசாரணையை முடுக்கி விடவுள்ளனர்.
Post a Comment