கூட்டுறவு சங்க தேர்தலில் விசி குகநாதன் மோசடி - அமீர் குற்றச்சாட்டு

|

Ameer Alleges Vc Guhanathan

இயக்குநர் அமீர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குநர் வி.சி.குகநாதன் மீது மோசடி குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவர் கூறுகையில், "பெப்சியில் இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு கொடுக்கப்பட்ட பையனூர் இடத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு தலைவராக வி.செ.குகநாதன் இருந்தார். அவரது தலைமையிலான குழு கலைக்கப்பட்டபின் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுகுறித்து பெப்சிக்கு முறையான எந்த வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அந்த சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கட்டிய பணத்திற்கு முறையான தகவலும், விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

பெப்சியில் பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே சொசைட்டியின் தேர்தலில் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்பது மரபு.

ஆனால் வி.செ.குகநாதன் அவர்கள் தேர்தல் அதிகாரியை கைக்குள் வைத்துக் கொண்டு அவருக்கு சாதகமானவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து, பெப்சி நிர்வாகிகளின் மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்ய வைத்துள்ளார்.

அதேபோல ஏற்கனவே கலைக்கப்பட்ட பழைய கூட்டுறவு சங்கத்தை மீண்டும் புதுப்பித்து, அதிலும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

அதுபோல இது சம்பந்தமான முறைகேடுகளை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வதாக உள்ளோம். துறையின் அமைச்சர் அவர்களுக்கும், தொடர்புடைய அரசு அதிகாரிக்கும் தெரிவித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

சரத்குமார், ராதாரவி

சில தினங்களுக்கு முன் இந்த சங்கத்துக்கு நடந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு மற்றும் கானா உலகநாதன், எம்.என்.கே.நடேசன், கே.ஆர்.செல்வராஜ், சுகுணா வீரமணி ஆகிய 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேறு யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பத்து பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment