சென்னை: நடிகை அஞ்சலி எங்கே... எங்கே... அவரது உறவினர்களும் என சினிமாக்காரர்களும் பத்திரிகையாளர்களும் தேடிக் கொண்டிருக்க, அவர் சென்னையிலேயே பாதுகாப்பாக மறைந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
அவரைக் கண்டுபிடிக்க, சென்னையில் அவர் யார் யாரோடெல்லாம் பேசினார் என்ற விவரங்களோடு விசாரணையைத் தொடங்கியுள்ளனர் போலீசார்.
சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த அஞ்சலி, ஹைதராபாதில் தஸ் பல்லா என்ற ஹோட்டலில் தங்கினார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்கிருந்து மாயமானார்.
ஹோட்டல் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அவர் காலையில் ஹோட்டலை விட்டு ஒரு இளைஞருடன் வெளியேறி, சாம்ஷாபாத் விமான நிலையத்துக்குப் போனது தெளிவாகியுள்ளது. அதன் பிறகு அவர் சென்னைக்குப் போனாரா பெங்களூர் போனாரா என்று தெரியாமல் இருந்தது.
ஆனால் அவரை யாரும் கடத்தவில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
அடுத்து அஞ்சலி எங்கே தங்கியிருக்கக் கூடும் என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறது போலீஸ்.
ஹைதராபாதில் அஞ்சலி தங்கியிருந்தபோது, அவர் சென்னையில் உள்ள 18 பேருக்கு செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகுதான் அவரது மொபைல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த 18 பேர் மொபைல் எண்களையும் கைவசம் வைத்துள்ள போலீசார், ஒவ்வொருவராக விசாரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த சுமின் சாலமன் என்ற டாக்டரிடம்தான் அடிக்கடி அஞ்சலி பேசியுள்ளார். அண்ணா நகரில் வசித்து வரும் அவரிடம் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அடுத்து அஞ்சலி தொடர்பு கொண்ட சினிமா நண்பர்களிடமும் விசாரிக்கப் போகிறார்களாம்.
அஞ்சலி கடைசியாக போன விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே விமானங்கள் போகின்றன. அஞ்சலி பெங்களூரில் இல்லை, அங்கு வரவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியெனில் அவர் சென்னையில்தான் பாதுகாப்பாக எங்கோ இருக்கிறார் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை தொடர்கிறது.
எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் அஞ்சலி வந்துவிடுவார்... மர்மங்கள் விலகும் என அவரது நண்பர்கள் சொல்லி வருகின்றனர்.
Post a Comment