அஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம்

|

Young Telugu Actor Was With Anjali In The Car

ஹைதராபாத்: அஞ்சலியுடன் காரில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த நபர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவராக இருக்கலாம் என்று அவரது அண்ணன் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமானார். அவர் ஹோட்டல் வாசலில் நின்ற கார் ஒன்றில் ஏறிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காரில் இருந்த நபரின் முகம் வீடியோவில் சரியாகத் தெரிவில்லை. அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அஞ்சலியை கண்டுபிடித்து தருமாறு அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் அவரது அண்ணன் ரவிசங்கர் தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஹைதராபாத் ஹோட்டலில் எங்கள் சித்தப்பா சூரிபாபுவுடன்(பாரதியின் கணவர்) அஞ்சலி தங்கியிருந்தார். சித்தப்பா குளித்துக் கொண்டிருக்கையில் அஞ்சலி வெளியே சென்றுள்ளார். எனக்கு சித்தப்பா மீது சந்தேகமாக உள்ளது. காலை 9.50 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்பிய அஞ்சலி கடைசியாக 11 மணிக்கு ஒரு நடிகருடன் செல்போனில் பேசியிருக்கிறார். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து அந்த அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி ஏறிச் சென்ற காரில் தெலுங்கு இளம் நடிகர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையே தோகாவில் இருக்கும் எங்கள் அம்மா பார்வதி தேவி எனக்கு போன் செய்தார். அஞ்சலி தன்னை அழைத்து தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியதுடன், அண்ணன் கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்லுங்கள் என்று கூறியதாக எங்கள் அம்மா தெரிவித்தார். அஞ்சலியை பார்த்தால் தான் புகாரை வாபஸ் பெறுவேன் என்று கூறினேன் என்றார்.

அதன் பிறகு அவர் காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் பெற சென்றார். ஆனால் அஞ்சலியை நேரில் பார்க்காமல் புகாரை வாபஸ் பெற அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

அஞ்சலியின் தாய் ஆந்திராவில் இருப்பதாக அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்தார். ஆனால் ரவிசங்கரோ அவர் தோகாவில் இருப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment