சென்னை: சென்னை கமிஷனர் அலுவலகமே நடிகை அஞ்சலியின் சித்தி பெரும் கும்பலோடு வந்து புகார் கொடுத்ததால் பரபரப்பில் மூழ்கியிருந்த நிலையில் நடிகர் ஆர்யா தனது சேட்டை படத்தின் திருட்டு விசிடி கொடுத்து புகார் கொடுக்க வந்திருந்தார். அஞ்சலி குறித்து முதலில் கருத்து தெரிவிக்க மறுத்த அவர் பின்னர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
நேற்று கமிஷனர் அலுவலகமே டென்ஷனாக காணப்பட்டது. காணாமல் போன அஞ்சலியின் சித்தி பாரதி தேவி தனது கணவர் சூரியபாபு, வக்கீல் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஒரு பெரும் கும்பலுடன் புகார் கொடுக்க வந்திருந்தார்.
அதேபோல நடிகர் ஆர்யாவும் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவரும் அஞ்சலி தொடர்பாக கமிஷனரைப் பார்க்க வந்திருப்பாரோ என்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்யா உள்ளே போய் விட்டு திரும்பி வரும் வரை செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
புகார் கொடுத்து விட்டுத் திரும்பிய ஆர்யாவை செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். அஞ்சலி குறித்து ஏதாவது பேசினீர்களா கமிஷனரிடம் என்று கேட்க அவரோ டென்ஷனானார். என்ன காமெடி பண்றீங்களா என்று கேட்டுவிட்டு கிளம்பப் பார்த்தார்.
இருப்பினும் செய்தியாளர்கள் விடவில்லை. அஞ்சலி குறித்து சொல்லுங்கள் என்று கேட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, சேட்டை படம் திருட்டு வி.சி.டி.யாக வெளிவந்து விட்டது. அதை தடுத்து நிறுத்தும்படி கேட்டு புகார் கொடுக்கவே வந்தேன்.
அஞ்சலி நல்லவர். அவர் காணாமல் போனது அவரது தனிப்பட்ட பிரச்சினை. அந்த பிரச்சினையை அவரே தீர்த்துக்கொள்வார். படப்பிடிப்பின்போது அஞ்சலி என்னிடம் பேசிக்கொண்டு இருப்பார். அப்போது அவர் என்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று கூறி விட்டுக் கிளம்பினார் ஆர்யா.
சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியில் ஆர்யா பலமுறை டேக் வாங்கியதாக செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment