சென்னை: எங்களுக்கு உதவுவதாக விஜய் சொல்லவும் இல்லை, அவர் உதவியைப் பெறும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர் மறைந்த மேஜர் முகுந்த் குடும்பத்தினர்.
சமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷேவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமென்று விஜய்க்கு தெரிவித்தார்களாம்.
நாட்டின் எலையில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவான மேஜரின் குழந்தையை நேரில் சென்று பார்த்துவிட்டு, அவருடன் ஒரு நாளைச் செலவிட்டார் விஜய்.
அர்ஷேவை விஜய் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அர்ஷாவின் படிப்புச் செலவை விஜய் ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒன்இந்தியா உள்பட சில தளங்களிலும் அந்தத் தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்தவித விளக்கங்களும் வெளிவரவில்லை. அதே நேரம் மேஜர் முகுந்த் சார்பில் இந்த தகவலில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேஜர் முகுந்தின் ஃபேஸ்புக் பகத்தில், "அர்ஷே விஜய் ரசிகை என்பதையறிந்து, அக்ஷராவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார் விஜய்.
ஒரு நாள் முழுவதும் விஜய்யுடன் இருந்த அர்ஷேவிற்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. இதற்காக விஜய்க்கு மேஜர் முகுந்தின் குடும்பத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
விஜய் அர்ஷேவை வெளியில் அழைத்துச் சென்றாரே தவிர எவ்வித உதவியும் செய்தவதாகச் சொல்லவில்லை. முகுந்தின் குடும்பத்தினரும், முகுந்தின் பெயரால் எந்த உதவியும் பெறக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். இந்த விளக்கம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.