கோடம்பாக்கம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா தியேட்டர்கள்!

|

கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா தியேட்டர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 100 முதல் 120 வரையிலான இருக்கைகள் போடப்படும்.

ஜெயலலிதா முதல்வரான பிறகு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அடுத்து அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி, மக்களுக்காக மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

7 locations selected for Amma Theaters in Chennai

இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மேலும் பல திட்டங்கள் அம்மா பெயரில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த வரிசையில் சென்னையில் அம்மா தியேட்டர்கள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா தியேட்டர் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களிலும் அம்மா தியேட்டர் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 7 இடங்களில் கட்டப்பட உள்ள அம்மா தியேட்டர்களுக்கு அரசின் அனுமதி வேண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் தியேட்டர் கட்டும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளு குளு வசதியுடன் கட்டப்படும் அம்மா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் மற்ற தியேட்டர்களை விட 30 சதவீதம் குறைவாக இருக்கும். 6 மாத இடைவெளிக்குப் பிறகு
முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளதால் ‘அம்மா' தியேட்டர்கள் விரைவில் கட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Post a Comment