இது இனப்படுகொலையா... இல்லையா? - நெஞ்சை உலுக்கும் ஆவணப்படம்

|

இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆதாரங்களுடனும் தொகுத்து ‘இது இனப்படுகொலையா? இல்லையா?' என்கிற புதிய ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வ கௌதமன்.

இந்த ஆவணப்படம் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில், 600 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

A new documentary on Srilankan Tamils genocide

ஈழத்தில் தொடர்ச்சியாக, பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை தொகுத்து ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக்கிய கௌதமனின் படைப்பாக்கத்தை பார்த்தவர்கள் கனத்த மனதோடு கண் கலங்கி அழுதார்கள்.

ஆவணப் படம் படம் திரையிடல் முடிந்தவுடன் தமிழினத் தலைவர்கள் அனைவரும் இதுவரையிலும் ஈழப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

A new documentary on Srilankan Tamils genocide

இந்த ஆவணப் படம் குறித்தும், தமிழினப் படுகொலை குறித்தும் பலர் பேசினார்கள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், "உலகம் முழுதும் பரந்து வாழும் அனைத்து மக்களிடத்திலும் இந்த ஆவணப் படத்தினை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தச் செய்தியை உலகம் பூராகவும் பரப்புவதன் ஊடாக மட்டுமே நம்முடைய இனத்தின் அழிவை உலகத்தின் கவனத்தின் பால் ஈர்க்க முடியும். அதற்கு இந்தப் படம் சிறப்பாக உதவும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். சிறப்பாக காட்சிகளைத் தொகுத்து பதிவு செய்த தம்பி கௌதமனுக்கு பாராட்டுக்கள்," என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில், "கௌதமன் தொடர்ச்சியாக பல படைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார். அவை எல்லா இடத்துக்கும் எல்லா மொழிகளிலும் கொண்டு போக வேண்டும். அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் இலங்கையில் இடம்பெறுவது இனப்படுகொலை. இதனை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி தீர்மானம் போட்டோம். அதனை எல்லோரும் வரவேற்றார்கள். தமிழன் என்று பெருமை பேசுகிறோம். தமிழன் என்றால் யார்? சமத்துவமாக, ஜாதி வேற்றுமை இன்றி எல்லோரும் தமிழன் என்கிற உணர்வோடு நாம் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும். அந்த உணர்வு மங்கும் போது தான் தமிழனுக்கு பல சிக்கல்கள் வருகின்றன. இதனை நாம் மறந்துவிடக் கூடாது.

A new documentary on Srilankan Tamils genocide

எனவே, ஈழத் தமிழர்களுக்கு நிகழ்வது மனித குல சோகம். வியட்நாமுக்கு அடுத்த படியாக அதை விடக் கொடுமையாக 25 - 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழினம் அழிக்கப்பட்டிருக்கின்றது. எம்மினத்தைக் காக்க வேண்டும் என்கிற வைராக்கியம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் சுடர் விட்டு எரிய வேண்டும். இந்தப் படம் அந்த வைராக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி 29 உயிர்கள் தற்கொலை செய்து விட்டார்கள். அவர்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எல்லோருமே வாழக் கூடிய உயிர்கள். செய்து மடிந்து விட்டார்கள் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. முத்துக்குமார் தன் மரண சாசனத்தில் ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லவில்லை. தமிழினம் எப்படிச் சீர் கெட்டிருக்கின்றது என்பதைச் சொன்னார். அதெல்லாம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டும். தமிழன் என்கிற முறையில் ஒன்று பட்டிருக்க வேண்டும். இனம் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இன அழிப்புக்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.

A new documentary on Srilankan Tamils genocide

கௌதமன் இந்தப் படைப்பில் வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த வெற்றியை எல்லா இடத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழின அழிப்பு என்பது மட்டுமல்லாமல், ஒரு மனித குலம் எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றது. என்பதனைக் கூறும் இந்தப் படம் பல்வேறு தளங்களில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். கௌதமனுக்கும், மணிவண்ணனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்," என்றார்.

 

Post a Comment