'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!'
உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை.
இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர்.
கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இகோர் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறுகையில், "சென்னையில் நான்கு இளைஞர்கள் வேலையின்றி வெட்டியாய் சுற்றித் திரிகின்றனர். சிறு சிறு குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் குழப்பங்களை காமெடியாக சித்தரிப்பதே இப்படத்தின் கதை.
எல்லோரும் முட்டாளாக இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பது படம் பார்க்கும்போது புரியும். பாட்டு, கூத்து, கும்மாளம் என முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. கடைசி வரை சிரித்துக் கொண்டே இருக்கும்படி திரைக்கதை இருக்கும். ஆக்ஷன், காதலும் உண்டு," என்றார்.
படத்தின் ட்ரைலரைக் காட்டினார்கள். அதில் நாயகி ப்ரியங்கா நான்கு இளைஞர்களை விளக்குமாறால் வெளுத்துக் கட்டும் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சியை எடுக்கும்போது முதலில் வெறுமனே நடிப்புதானே என அசால்டாக போயிருக்கிறார்கள் அந்த நான்குபேரும். ஆனால் டேக் போனபோது நிஜமாகவே விளக்குமாறால் பின்னிவிட்டாராம் ப்ரியங்கா. அம்மணிக்கு அப்படி என்ன கோபமோ!
படத்துக்கு இசை சாம் டி ராஜ். விரைவில் வெளியாகிறது இந்தப் படம்.
Post a Comment