சான் ஓசே(யு.எஸ்): குறும்படங்கள் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான இளைய தலைமுறை வெற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (ஃபெட்னா)யின் குறும்பட விழாவில் வெற்றி பெறும் படங்களை தனது Benchflix நிறுவனம் மூலம் வெளியிட உள்ளார்.
ஆண்டு தோறும் அமெரிக்காவில் தமிழ் விழாவை நடத்தி வரும் ஃபெட்னா கடந்த ஆண்டு முதல் குறும்படப் போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் சான் ஓசே நகரில் நடைபெறும் தமிழ் விழாவையொட்டி நடைபெறும் குறும்படப் போட்டியில் கார்த்திக் சுப்பராஜ் நடுவராக இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்ய உள்ளார்.
யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், குறும்படங்கள் மூலமாகவே வாய்ப்புகளைப் பெற்று ‘பிட்சா' படத்தின் மூலம் இயக்குநரானர். ஜிகர்தண்டாவின் வெற்றி கார்த்திக் சுப்பராஜை முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் கதை கேட்கும் அளவுக்கு புகழ் பெற்றார். திரைப்பட இயக்குநராக வெற்றி பெற்ற போதும் தான் கடந்து வந்த குறும்படப் பாதையை மறக்காமல், ஆறு குறும்படங்களை இணைத்து தியேட்டரில் வெளியிட்டு புதிய முயற்சியையும் செய்தார். அந்தப் படங்கள் பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் புதிய முயற்சிக்காக பாராட்டுகள் பெற்றார்.
தனது Benchflix நிறுவனம் மூலம் இந்த முயற்சிகளை தொடரப் போவதாகவும் தெரிவித்தார். இந் நிலையில் ஃபெட்னா விழாவில் இடம்பெறும் குறும்படங்களை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளார். வெற்றி பெரும் படங்களை Benchflix நிறுவனம் மூலம் வெளியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் நிறுவனம் முலம் பெரிய திரையிலும் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், ஃபெட்னா குறும்படப் போட்டியில் வெற்றிப் பெறப்போகும் படங்கள் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Post a Comment