திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்த பிரேமம் படப் பிரச்சினையில் தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது காவல் துறை.
இதுதொடர்பாகபிடிபட்ட குற்றவாளிகள் 3 பேரும் +2 மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பிரேமம் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே ஆன்லைனில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
வெளிநாட்டு மாபியா கும்பலிடம் இருந்து இந்தப் படத்தின் பிரதியை வாங்கி இருக்கின்றனர் இந்தப் பள்ளி மாணவர்கள். சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படத்தின் பிரதியை திருட்டு விசிடியாக மாற்றிய மாபியா குழு அந்தப் பிரதியை இந்தப் பள்ளி மாணவர்களிடம் கொடுத்துள்ளது.
அதனை வாங்கிய பள்ளி மாணவர்கள் 3 பேரும், கடந்த ஜூன் மாதம் 22 ம் தேதி அதனை டோரன்ட் இணையதளத்தில் போலி ஐடி கொடுத்து பதிவு செய்துள்ளனர். பிரேமம் படம் சென்சார் போர்டுக்கு செல்லும் முன்பு படத்தின் இறுதிக் கட்ட பணிகள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரு இடங்களில் உள்ள ஸ்டுடியோக்களில் நடந்ததால் காவல் துறையினர் அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படம் தியேட்டர்களில் இருந்து காப்பி செய்யப்பட்டு இருந்தால் பெரிய பிரச்சினையாக உருமாறி இருக்காது, ஆனால் சென்சார் போர்டுக்கு அனுப்பிய காப்பி இணையத்தில் வெளியாகி இருப்பதால் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கும் மாபியா கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து தற்போது பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் திருவனந்தபுரம் காவல் துறையினர்.
படம் இணையதளத்தில் வெளியானதில் தொழில்நுட்பங்கள் அதிகம் நிறைந்தது இருப்பதால் வழக்கு சிக்கலான ஒன்றாக மாறியிருப்பதாக, வழக்கை விசாரித்து வரும் டிஐஜி டிபி சென்குமார் தெரிவித்து உள்ளார்.
சென்சார் போர்டுக்கு அனுப்பிய பிரதியில் இருந்து திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் பதிவேற்றிய பின்னணியில் முக்கியமான, சினிமா பிரபலம் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment