திரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை

|


இளவரசி டயானாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தில் டயானாவாக நடிக்க ஒரு ஹாலிவுட் நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்டீபன் இவான்ஸ்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி இளவரசி டயானா. உலகப் புகழ்பெற்ற அவர் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். டயானாவின் மெய்க்காப்பாளர் கென் வார்பேர் எழுதிய டயானா: குளோஸ்லி கார்டட் சீக்ரட் என்ற புத்தகத்தை தழுவி படம் எடுக்கவிருக்கின்றனர்.

இது குறித்து தயாரிப்பாளர் இவான்ஸ் கூறியதாவது,

இளவரசி டயானா தனது இரண்டாவது மகன் ஹாரியைப் பெற்றெடுத்த பிறகு அதாவது சுமார் 11 ஆண்டு கால வாழ்க்கையை படமாக்குகிறோம். இந்த படத்தின் மூலம் டயானாவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பது ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தவிருக்கிறோம்.

இந்த படத்தில் டயானாவை ஆஹா, ஓஹோ என்றோ ச்சே அவரா என்றோ காட்ட மாட்டோம். அவரிடம் அற்புதமான குணாதிசயங்கள் இருந்தன. மக்களைக் கவரும் தன்மை கொண்டவர். சொல்ல வேண்டியதை ஒரே வரியில் நச்சென்று சொல்லும் திறன் வாய்ந்தவர்.

அவர் அரசாங்கத்தில் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் அவருக்கு இயல்பாகவே தந்திரம் மற்றும் பிடிவாத குணம் இருந்தது. ஏதாவது முடிவு செய்தால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அவர் நட்பைப் பயன்படுத்தியும் உள்ளார், உதறியும் விட்டுள்ளார் என்றார்.

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரேட் தாட்சரின் வாழ்க்கை 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதில் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் தாட்சராக நடித்து விருதும் வாங்கியுள்ளார். அதே போன்று டயானாவின் வாழ்க்கைப் படமும் வெற்றி பெறும் என்று இவான்ஸ் நம்புகிறார்.
 

Post a Comment