விவேக்கின் பசுமை கலாம் திட்டத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

|

13 Lakh Saplings Planted Under Vivek
சென்னை: நடிகர் விவேக் தொடங்கி வைத்த பசுமை கலாம் திட்டத்தை வரும் ஜூன் மாதம் 13ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நிறைவு செய்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தார். அப்போது கலாம், நீங்கள் ஏன் உங்கள் படத்தில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் பற்றி கூறக்கூடாது என்று கேட்க அதற்கு விவேக் நான் படத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், நீங்கள் கூறினால் ஒரு இயக்கம் அமைத்து மரக்கன்றுகள் நடுவேன் என்றார்.

அதற்கு கலாம் ஓ.கே. சொல்லி எத்தனை கன்றுகள் நடுவீர்கள் என்று கேட்டதற்கு 10 லட்சம் என்று பதில் அளித்தார் விவேக். இதையடுத்து விவேக் பசுமை கலாம் என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இதுவரை 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்த திட்டத்தின் நிறைவு விழா வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இது குறித்து விவேக் கூறுகையில்,

பசுமை கலாம் திட்டத்தை அப்துல் கலாம் துவங்கி வைத்தார். என்னையும் அறியாமல் இத்திட்டத்தில் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது எனது முயற்சியின் முதல் கட்டம் மட்டுமே. மேலும் பல லட்சம் கன்றுகளை நட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். மரவளத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியதாக இதிகாசங்களில் உள்ளது. அதே போன்று அரசின் மரவளம் பெருக்கும் பணிக்கு நான் அணில் போல் பணியாற்றுவேன் என்றார்.
Close
 
 

Post a Comment