கொல்கத்தா அணிக்கு பிரபுதேவா விருந்து கொடுக்கலாமா?.. இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

|

Hmk Condemns Prabudeva Rowdy Rathor Party Kkr Supporter   
சென்னை: ரவுடி ரத்தோர் படக் குழுவினரின் விருந்து என்ற பெயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கானுக்கும், அந்த அணிக்கு ஆதரவாக மைதானத்தில் திரண்டிருந்த இந்தி நடிகர் நடிகைகளுக்கும் சென்னையில் விருந்து கொடுத்தது கண்டனத்துக்குரியது என்று இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரபுதேவா, ரவுடி ரத்தோர் படக்குழுவினரின் விருந்து என்ற பெயரில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வென்ற கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கும் அந்த அணியை ஆதரித்த மும்பை, நடிகர், நடிகைகளுக்கும் சென்னையில் விருந்து கொடுத்து குதூகலித்தது வேதனை அளிக்கிறது.

பிரபுதேவா வாழ்ந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். இங்குள்ள ரசிகர்களால்தான் பிரபலமானார். இந்திப் படம் இயக்கப் போனதும் மாறிவிட்டார். இந்தி நடிகர்கள்தான் அவருக்கு பெரிதாக தெரிகிறார்கள்.

சென்னை அணி தோற்றதும் விருந்தையே ரத்து செய்து இருக்க வேண்டும். அல்லது கொல்கத்தா அணியினரை அழைக்காமல் விட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது தமிழர்களுக்கு எதிரானதாகவே கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரபுதேவா தரப்பு இதை மறுத்துள்ளது. போட்டிக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட விருந்து இது. முழுக்க முழுக்க ரவுடி ரத்தோர் படக் குழு ஏற்பாடு செய்த விருந்து. தமிழ், இந்தி நடிகர், நடிகைகளுக்கு அந்த விருந்து கொடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த அக்ஷய்குமார், சோனாக்சி பங்கேற்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளும், பங்கேற்றனர். விருந்து நடந்த அன்று யதேச்சையாக கொல்கத்தா அணி வென்றுள்ளது. அதற்கும் விருந்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுளளது.

விருந்து கொடுத்தாலும் வி்ல்லங்கமா..!
Close
 
 

Post a Comment