தந்தம் பதுக்கிய வழக்கு: மோகன்லாலிடம் 1 மணி நேரம் விசாரணை!

|

Mohan Lal Attends Forest Dept Interrogation

கொச்சி: சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன்லாலிடம் வனத்துறை அதிகாரிகள் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் 4 யானை தந்தங்கள் வைத்திருந்தார். அவற்றை கோடநாடு வனத்துறையினர் கைப்பற்றி மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மோகன்லாலுக்கு 3 முறை வனத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் மோகன்லால் இந்தத் தந்தங்களை சட்டப்படி பெற்றதாகவும், 23 ஆண்டுகளாக வைத்திருப்பதாகவும் கூறி இந்த விசாரணைக்கு வராமல் இருந்து வந்தார். இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி எர்ணாகுளம் தேவரா கோர்ட்டில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறை வழக்கு தொடர உள்ளது.

இதற்கிடையே மோகன்லால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவர் கோடநாடு வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரிடம் வனத்துறை அதிகாரி நாகராஜ் யானை தந்தங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. வன அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு மோகன்லால் பதில் அளித்தார். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மோகன்லால் தன் வீட்டில் இருந்த யானை தந்தங்களை தனது நண்பர்களான பி.என்.கிருஷ்ண குமார், கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொடுத்ததாக கூறி உள்ளார். எனவே அவரது நண்பர்களிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

 

Post a Comment