பெங்களூர்: நடிகர் துனியா விஜய்-நாகரத்னா தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறப் போவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவர் ‘துனியா‘ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததால், அவர் துனியா விஜய் என்றே அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி நாகரத்னா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2 பேரும் பிரிந்தனர். நடிகர் துனியா விஜய் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். துனியா விஜயுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவரது மனைவி நாகரத்னா ஒரு மனு தாக்கல் செய்தார். இவற்றின் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது மனைவி நாகரத்னாவுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், தந்தையுடன் வசிக்க குழந்தைகள் விருப்பப்படுவதால் அவர்களது தாயார் மாதத்திற்கு 2 முறை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் துனியா விஜய்க்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது துனியா விஜய் மற்றும் நாகரத்னா ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது சேர்ந்து வாழ்வது குறித்து நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர்கள் மூலம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களது குழந்தைகளும் உடன் இருந்தனர். அப்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி 2 பேரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.
அதன்படி குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளும் வாபஸ் பெற முடிவு செய்தனர். இரு தரப்பினரும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நடிகர் துனியா விஜய்யின் இந்த முடிவை கர்நாடக திரை உலகினர் வரவேற்று உள்ளனர்.
Post a Comment