திருவனந்தபுரம்: தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் தனது இசைக் குழு நடத்தி நிகழ்ச்சி குறித்து மிக மோசமான விமர்சனங்கள் வந்ததால், அந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய பணத்தைத் திருப்பித் தருகிறார் நடிகர் மோகன்லால்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக் கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது.
தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் ‘லாலிசம்' என்ற இசைக்குழுவும் பங்கேற்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன் லாலின் பிளாக்கிலும் சமூக வலைதள பக்கத்திலும் பலர் தங்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர்.
கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்ததாக மோகன் லால் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக ரூ 2 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவழித்ததாகக் கூறியுள்ள மோகன்லால், அந்த கணக்கு விவரங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, "நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்" என்று மோகன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
Post a Comment