எங்களுக்கு நடிக்க மட்டுமல்ல அடிக்கவும் தெரியும்.. விஷாலுக்கு நாடக நடிகர்கள் "வார்னிங்"!

|

மதுரை: எங்களுக்கு நாடகத்தில் நடிக்க மட்டுமல்ல, அடிக்கவும் தெரியும். நாடக நடிகர்களை இழிவுபடுத்திப் பேசும் மன்சூர் அலிகான், எங்களை நடிகர் சங்கத்திற்குக் கொண்டு வந்த ராதாரவி மற்றும் எங்களுக்காக பாடுபடும் சரத்குமார் ஆகியோரை இழிவுபடுத்தும் விஷால், நாசர் போன்றோர் வாயடக்கமாக இருக்க வேண்டும் என்று மதுரை நாடக நடிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் ( தமிழ் நடிகர் சங்கம் என்று கூட பெயர் வைக்கத் தைரியமில்லை பாருங்கள்) தாறுமாறாக சண்டைக் கூடாராமாகிக் கிடக்கிறது.

Drama artists warn Vishal and group

சரத்குமார், ராதாரவி ஆகியோரைக் குறி வைத்து விஷாலை முன்னிருத்தி பலர் களம் குதித்துள்ளனர். இந்த குழுவின் பின்னணியில் அரசியல் இருப்பபதாக சரத்குமார் குற்றம் சாட்டுகிறார். சரத்குமார் தரப்பு சரியில்லை என்று எதிர்த் தரப்பு பேசி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் ஒரு உறுப்பான நாடக நடிகர்களை தரக்குறைவாக பேச ஆரம்பித்துள்ளனர் விஷால் தரப்பினர். இது நாடக நடிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மன்சூர் அலிகான் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

இதையடுத்து மன்சூர் அலிகான், விஷால், நாசர் போன்றோருக்கு மதுரை நாடக நடிகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் சங்கத்தில் வலுவான ஒரு உறுப்பினர்களாக மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இவர்களின் ஆதரவு பெற்றோரே எளிதாக வெல்ல முடியும்.

இதனால்தான் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மதுரையில் வைத்து பிரசாரத்தைத் தொடங்கினர். விஷால் குரூப்பும் கூட மதுரையிலேயே பிரசாரத்தைத் தொடங்கியது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சரத்குமார், ராதாரவி போன்றோர் நாடக நடிகர்கள் நலனுக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக விஷால் போன்ற சில நடிகர்கள் செயல்படுகின்றனர். மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதாரவி. எனவே சரத்குமார், ராதாரவி கரத்தை வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராக செயல்படும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும் என்று அவர்கள் கூறினர்.

நாடக நடிகர்களின் இந்த எச்சரிக்கையால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Post a Comment