சென்னை: ஏற்கனவே பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்த நயன்தாரா தற்போது மாயா படத்திலும் ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்து இருக்கிறார்.
பேய் படம் என்று சொல்லப்படும் மாயாவில் இளம் குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கும் தாயாக வந்து ரசிகர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு நடித்து இருக்கிறாராம் நயன்.
பொதுவாக ஹாலிவுட்டில் இந்த மாதிரி கதைகள் எடுக்கப்பட்டு அவை மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஏனெனில் கணவர் இல்லாமல் குழந்தையை வளர்க்கும் இளம்பெண்கள் கதாபாத்திரம் பார்ப்பவர்களின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி விடும்.
இதே போன்று நேற்று வெளியான மாயா ட்ரைலரில் முக்கியமான அம்சமாக காட்டப்படும் மாயவனம் காடு, அங்கிருக்கும் பழுதடைந்த மனநல மருத்துவமனை காட்சிகள் பின் அதை சார்ந்த புத்தகம் என டிரெய்லரின் துவக்கமே பார்வையாளர்களை கவர்கிறது.
இளம் குழந்தையுடன் தவிக்கும் தாயாக ஏற்கனவே வெளியான தமிழ் படங்கள் , நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளன. ரிதம் (மீனா), இங்லீஷ் விங்லீஷ்( ஸ்ரீதேவி), 36 வயதினிலே, வேட்டையாடு விளையாடு (ஜோதிகா), என்னை அறிந்தால் (த்ரிஷா) என சொல்லிக் கொண்டே போகலாம், எப்போதுமே இதுபோன்ற இளம்தாய் கேரக்டர்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டு விடும்.
இந்தப் படமும் அதே போன்று மக்களிடம் பேசப்படும் ஒரு படமாக அமையும் என்பது படத்தின் டிரைலரிலே தெரிகிறது.
தமிழ் சினிமாவில் சற்றே ஓய்ந்து இருந்த பேய்ப் படங்களை மீண்டும்தனது மாயாவின் மூலம் ஆரம்பித்து வைக்கிறார் நயன்தாரா.
மாயாவின் வெற்றியைப் பொறுத்து தமிழ் சினிமாவை மீண்டும் ஆட்டிப்படைக்கப் போவது ஆண் பேய்களா இல்லை பெண் பேய்களா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரிந்து விடும்.
Post a Comment