6/20/2011 11:34:53 AM
இந்த ஆண்டு முதல் திரைப்பட தொழிலாளர்களின் சம்பளம் உயர இருப்பதால் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். திரைப்படத் துறையில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தவிர 23 தொழிலாளர் சங்கம் உள்ளது. இவை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளத்தை எவ்வளவு உயர்த்துவது என்று ஒவ்வொரு சங்கத்துடனும் தயாரிப்பாளர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதன் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அது அமுலில் இருக்கும். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்த ஆண்டு இது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு காரணம் முன் எப்போதையும் விட தற்போது திரைப்பட தொழிலாளர்கள் அதிகமாக சம்பள உயர்வு கேட்பதாகவும், சில சங்கங்கள் தங்கள் சம்பளத்தை மூன்று மடங்கு வரையும், அதற்கு கூடுதலாகவும் உயர்த்தி கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிந்து வருவதாகவும் தெரிகிறது. 'திரைப்பட தொழிலாளர்கள் ஒரே மாதிரியான சம்பளத்தை கொண்டவர்கள் அல்ல. தினக்கூலிகள் இருக்கிறார்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி மாறுபட்ட சம்பள நிலையை கொண்டிருப்பதால் தனித்தனி பேச்சுவார்த்தைகள் மூலம்தான் அவர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய முடியும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விலைவாசி இப்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பை விட, இப்போது படத்தின் தயாரிப்பு செலவும் பல வழிகளில் உயர்ந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது தொழிலாளர்களின் சம்பளமும் உயர்வது இயற்கைதானே' என்கிறார் திரைப்பட தொழிலாளர் சங்கப் பிரமுகர் ஒருவர்.
'திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நியாயமானது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதை தாங்க கூடிய சக்தி தயாரிப்பாளர்களுக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. பெரிய தயாரிப்பாளர்களுக்கு பத்து கோடி ரூபாய் செலவு என்பதில் 11 கோடி என்று போய்விடும். ஆனால் ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாயில் படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களின் நிலை மோசமானது. இப்போது ஒரு நாள் படப்பிடிப்பு செலவு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை ஆகிறது. இனி அது, இரண்டு லட்சத்திலிருந்து மூன்று லட்சமாக உயரும். இது படத்தின் பட்ஜெட்டை 25 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் வரை உயர்த்தும். இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கலக்கத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் குழப்பமான சூழ்நிலையால் தீர்க்கமான எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறோம்' என்றார் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர் ஒருவர்.
திரைப்படத் தொழிலாளர்களின் நியாயம் ஒரு பக்கம், தயாரிப்பாளர்களின் கலக்கம் இன்னொரு பக்கம், இதை திரைப்படத் துறை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது திரைப்படத் துறையை நம்பியிருப்பவர்களின் கவலையாக உள்ளது.
Post a Comment