மோசடி புகார்: புதுமுக நடிகர் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சி!

|


நிலமோசடி மோசடி புகாரில் சிக்கிய புதுமுக நடிகர் விக்னேஷ் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேரத்துள்ளனர்.

உச்ச கட்டம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் இந்த விக்னேஷ். சிட்லபாக்கத்தில் வசிக்கிறார்.

அம்பத்தூரில் நிலம் வாங்குவது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி, கண்ணன் ஆகியோரிடம் இருந்து விக்னேஷ் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். தங்களிடம் இருந்து ரூ.16.50 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக விக்னேஷ் மீது பழனிச்சாமி, கண்ணன் இருவரும் புறநகர் போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹாவிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து விசாரிக்கும்படி சிட்லபாக்கம் போலீசாருக்கு கமிஷனர் உத்தர விட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசிடமும் அவரது தாய் வசந்த லட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் தனது பெயர் கெட்டுவிட்டதாக புலம்பிய விக்னேஷ் மனமுடைந்து தனது வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

உறவினர்கள் அவரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"ரூ 5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ 16.50 லட்சம் என பொய்யாக கணக்கு காட்டி புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தினர். எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன்," என வாக்குமூலம் அளித்துள்ளார் விக்னேஷ்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Post a Comment