'அவன் இவன்' அட்டகாசம்-அம்பிகா மீண்டும் பிசி!

|


கவர்ச்சிகரமான அம்பிகாவையேப் பார்த்துப் பழகிப் போய் விட்ட ரசிகர்களுக்கு அவன் இவன் படத்தில் அம்பிகா காட்டிய அட்டகாசமான தெனாவெட்டு நடிப்பு வியப்பில் மூழ்கடித்து விட்டது. அம்பிகாவின் கேரக்டருக்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்போது அம்பிகாவைத் தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகளாம்.

பாலா படங்களில் எத்தனை பேர் நடித்தாலும் யாராவது ஒருவர்தான் முத்திரை பதித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். அந்த வகையில் அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோக்களாக விஷாலும், ஆர்யாவும் நடித்திருந்தாலும், விஷாலின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

அதேசமயம், இவர்களை விட அம்பிகாவுக்குத்தான் ரசிகர்களிடம் செமத்தியான வரவேற்பாம். 'நம்ம' அம்பிகாவா இது என்று ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர், அம்பிகாவின் 'அசால்ட்'டான நடிப்பைப் பார்த்து.

படு கூலாக தம்மடித்தபடி அவர் பேசியதையும், குத்த வைத்து உட்கார்ந்து கொ்ண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து சக்களித்தியான ஆர்யாவின் அம்மா படு கிண்டலடித்துப் பேசுவதைப் பார்த்து கடுப்புடன் ஸ்டைலாக காலால் எட்டி உதைத்த காட்சியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இப்படிப்பட்ட நடிப்பும் அம்பிகாவுக்கு வருமா என்று அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் அம்பிகா.

அம்பிகாவிடம் கவர்ச்சி மட்டும் இல்லை, நல்ல நடிப்பும் உள்ளது என்பதை எப்போதோ அவர் உணர்த்தி விட்டாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்பிகாவை வித்தியாசமான கோணத்தில் பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் குஷியான விஷயமாகவே இது அமைந்துள்ளது.

இயக்குநர்கள் மத்தியிலும் கூட அம்பிகாவின் கேரக்டர் வெகுவாக ரீச் ஆகியுள்ளதால், தங்களது படத்தில் அவரை நடிக்க வைக்க கியூ வரிசையில் கிளம்பியபடி உள்ளனராம்.

அம்பிகாவுக்கும் இந்த திடீர் புகழ் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் வருகிற வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டாராம்.

அக்கா, பாத்து, வில்லி வேடமாக வந்து குவிந்து விடப் போகிறது, பார்த்து தேர்ந்தெடுத்து நடிங்க..
 

Post a Comment