வழக்கு எண் 18/9: மீடியாவைக் கலங்க வைத்த பாலாஜி சக்திவேல்!

|

Balaji Sakthivel Prostrates Thanks
பட்ஜெட்டில் சின்ன படமாக இருந்தாலும், படைப்புத் தரத்தில் இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் பெரிய படமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9.

இத்தனைக்கும் இந்தப் படத்தில் நடித்தவர்களில் ஒருவர் கூட தெரிந்த முகமில்லை. பலருக்கு கோடம்பாக்கமே ரொம்ப புதுசு. சேலத்திலும் தர்மபுரியிலும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த கிராமத்தினரை அழைத்து வந்து வழக்கு எண்ணின் பாத்திரங்களாக உலவவிட்டிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

படத்தைப் பார்த்த அத்தனைபேரும் தங்களையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இந்த மாதிரி படங்களுக்கு பாராட்டுகள் குவியும். பாக்ஸ் ஆபீஸ் நிறையாது. ஆனால் விதிவிலக்காக பாக்ஸ் ஆபீஸிலும் படு திருப்தி. இந்த சந்தோஷத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் பாலாஜி சக்திவேலும் தயாரிப்பாளர் லிங்குசாமியும்.

இந்த சந்திப்புக்கு, படத்தில் நடித்த அத்தனை பேரையும் வரவழைத்து மேடையில் அமர வைத்தனர். பெரும்பாலும் மிக எளிய மனிதர்கள். சென்னையின் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்ததே அவர்களுக்கு பெரும் கனவாகத்தான் இருந்திருக்கிறது, மைக் பிடித்து பேசிய பின்னும் கூட!

படத்தைப் போலவே, இந்த சந்திப்பும் உணர்வுப்பூர்வமானதாக, கண்கலங்க வைப்பதாக அமைந்துவிட்டது.

படக்குழுவினர் ஒவ்வொருவருமே "எங்களுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றி" என்று கண்ணீர் விட, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாலாஜி சக்திவேல்.

தன் முறை வந்தபோது, "பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாம் நான் அவ்வளவாக பேசுவது இல்லை. படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் . உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. இப்போது நான் நன்றி சொல்லும் விதம் தமிழ் மரபுக்கு முரணாகவே இருந்தாலும் கூட... " என்று சொல்லி நிறுத்தியவர்,

"லிங்குசாமி.. எழுந்து அங்கே போய் நில்" என்றார். லிங்குசாமி ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் வந்து நிற்க அனைவரது முன்னிலையில், பாலாஜி சக்திவேல் கீழே விழுந்து வணங்கினார். லிங்குசாமியும் பத்திரிகையாளர்களும் திகைத்து திக்குமுக்காடிவிட்டனர். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். " இதற்கு மேல் எனக்கு என்ன செய்வது, சொல்வதென்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் பாலாஜி சக்திவேல்.

அறைக்குள் ஒரு சில வினாடிகள் கனத்த மவுனம். சில செய்தியாளர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. மேடைக்குப் போய் அமர்ந்த லிங்குசாமியின் கண்களில் கண்ணீர் (ஒருவகையில் லிங்குசாமிக்கே குரு பாலாஜி சக்திவேல்தான். இவர்தான் லிங்குசாமியை இயக்குநர் வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்த்துவிட்டவர், உலக சினிமாவை அறிமுகப்படுத்தியவராம்!!).

இறுதியாக பேசிய லிங்குசாமி " படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்றால் அதற்கு பத்திரிகையாளர்கள்தான் காரணம். இயக்குனர்களுக்கு என்று தனியாக ஒரு ஷோ போட்டோம். எல்லா இயக்குனர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

அவர்களை அடுத்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் என்ன கூற போகிறீர்களோ என்ற பயந்து கொண்டே, உங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே படத்தினை போட்டு காண்பித்தோம். படம் முடிந்த உடன் நீங்கள் எழுந்து நின்று கை தட்டினீர்கள்.. சிலர் என்னிடம் வரும்போதே அழுதுவிட்டார்கள். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது படம் கண்டிப்பாக வெற்றி என்று.

'வழக்கு எண் 18/9' படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை மேலும் மேலும் இது போன்ற பல படங்களை தயாரிக்க தூண்டியுள்ளது. கண்டிப்பாக தயாரிப்பேன்.

'வழக்கு எண் 18/9' திரைப்படம் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வெல்லும். அதற்கு காரணம், பத்திரிகையாளர்கள் படம் பற்றி எழுதிய எழுத்துக்கள்தான். அத்தனை விமர்சனங்களும் ஒரே பேனாவால் எழுதப்பட்டதைப் போன்று அமைந்திருந்தன. என் வாழ்நாளில் இத்தனை உயர்வான விமர்சனங்களை வேறு எந்தப் படத்துக்கும் படித்ததில்லை. எத்தனை விருது வென்றாலும் அவை அனைத்தையும் நான் இந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்தான் பகிர்ந்து கொள்வேன்," என்றார்.

எத்தனையோ செய்தியாளர் சந்திப்புக்குப் போயிருக்கிறோம்... ஆனால் இந்த வழக்கு எண் சந்திப்பு, படத்தைப் போலவே 'எமோஷனல்!'
 

Post a Comment