'நாலு பேரில் ஒருவனல்ல... இப்போ ஹீரோக்களின் நண்பன்!' – உற்சாகத்தில் காமெடியன் சூரி

|

Comedian Soori Is Cloud Nine
காலையில் ஒரு படப்பிடிப்பு, மாலையில் ஒரு படப்பிடிப்பு என்று படு பிஸியாக இருக்கிறார் நடிகர் சூரி. கூடுதலாக விருது வாங்கிய உற்சாகம் வேறு.

ஆமாம், இந்த ஆண்டு நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் 'போராளி’ படத்தின் சிறந்த காமெடியனுக்கான விருதை தட்டி வந்திருக்கிறார் நடிகர் சூரி.

இது தவிர அந்த விழாவில் பல பிரிவுகளில் விருதுகளை வாங்கிய 'அழகர்சாமியின் குதிரை’, ’வாகை சூடவா’ ஆகிய படங்களிலும் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு கூடுதல் சந்தோஷம் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சூரி.

தமிழர்களின் தலை சிறந்த பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை மையமாக் கொண்டு ரீலிஸ் ஆன 'வெண்ணிலா கபடி குழு’ படம் எந்தளவுக்கு ரசிகர்களி டையே பரபரப்பாக பேசப்பட்டதோ, அந்தளவுக்கு பேசப்பட்டது அந்தப் படத்தில் இடம்பெற்ற 'பரோட்டா’ காமெடி. குறிப்பாக அந்த அசத்தலான காமெடியில் நடித்த சூரியை யாராலும் மறக்க முடியாது.

"ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவுதான் முதல் விருது. ரசிகர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்த விருதும் அப்படிப்பட்டது தான். என் காமெடி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. இந்த இடத்தை நான் எப்போதும் தக்க வைத்துக் கொள்வேன்", என்று அடக்கமாக சொல்லும் சூரியின் கையில் இப்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் மனம் கொத்திப் பறவை, வின்சென்ட் செல்வா இயக்கத்தில் துள்ளி விளையாடு, ஜி.என்.ஆர் குமரவேலு இயக்கத்தில் ஹரிதாஸ், அஸ்லாம் இயக்கத்தில் பாகன், சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன், ஜெயம் ரவி, சமுத்திரக்கனி இணையும் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சற்குணம் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் ஒரு படம், ராசு மதுரவன் இயக்கத்தில் மைக் செட் பாண்டி, எஸ்.பி.ராஜ்குமார் டைரக்ஷனில் பாக்கணும் போல இருக்கு... என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள்.

"நான்கு பேர்களில் ஒருவராக வந்து காமெடி செய்யும் போது சில நேரங்களில் நமக்குள் இருக்கும் முழுத் திறமைகளும் வெளியே தெரியாமல் போய் விடுகிறது.

ஆனால் சமீபகாலமாக எனக்கு நான் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோவுக்கு நண்பனாக படம் முழுவதும் வந்து காமெடி செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இதற்காக என் இயக்குனர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்கள். அந்தந்த படங்கள் ரீலிஸ் ஆகும் போது அந்த வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்," என்று உற்சாகமாக சிரிக்கிறார் சூரி.
 

Post a Comment