கேரவனுக்குள் கலாட்டா... ஓவியாவுடன் சண்டை.. வெளிநடப்பு செய்தார் தீபா ஷா!

|

சென்னையில் நடந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் ஷூட்டிங்கின்போது மெதுவாக பேசுங்களேன் என்று நடிகை ஓவியா கூறியதால் கோபமடைந்த தீபா ஷா அவரிடம் சண்டை பிடித்தார். பின்னர் ஸ்பாட்டை விட்டு வெளியேறிப் போய் விட்டார். இதனால் பரபரப்பாகி விட்டதாம்.

ஒரு படம் குறித்து வெளியாகும் செய்திகளை விட படப்பிடிப்பில் நடக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள்தான் இப்போதெல்லாம் நிறைய வருகிறது. இதில் இலவச பப்ளிசிட்டியும் அடங்கியுள்ளது என்பதால் இப்படிப்பட்ட செய்திகளை சம்பந்தப்பட்ட தரப்பினரும் கூட மறுப்பதில்லை.

அந்த வகையில் தமிழில் தற்போது ஹாட்டாகவும், பிசியாகவும் நடித்து வரும் ஓவியாவுக்கும், நடிகை தீபாஷாவுக்கும் இடையே முட்டிக் கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது.

இருவரும் சேர்ந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் விமல். இவர் ஏற்கனவே ஓவியாவோடு சில படஙக்ளில் ஜோடி போட்டவர். இப்போது 3வது முறையாக ஜோடி போட்டுள்ளார்.

இந்தநிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மாதவரம் பகுதியில் நடந்தது. கேரவனில் நடிகைகள் ஓவியாவும், தீபா ஷாவும் தங்களது ஷாட்டுக்கு காத்திருந்தனராம். அப்போது ஓவியா ஒரு செய்தியாளருக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தாராம். தீபா ஷா அருகில் இருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். அவர் சத்தம் போட்டபடி பேசியதால் ஓவியாவுக்கு பேட்டி கொடுக்க கஷ்டமாகி விட்டதாம்.

இதனால் தீபாஷாவை அழைத்து கொஞ்சம் அமைதியா இருங்க இல்லாட்டி அப்புறம் பேசுங்க என்று கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்டதும் தீபா ஷாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு விட்டதாம். ஓவியாவிடம் சத்தம் போட்டபடி அவர் வண்டியை விட்டு இறங்கி ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போயே விட்டாராம்.

அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகிகள் பி்ன்னாடியே ஓடி தீபாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனராம். ஆனால் ஓவியாவுக்கு அப்போது காட்சிகள் முடிந்து விட்டதால் அவர் கிளம்பிப் போய் விட்டார்.

அப்படிய ஓவியா, இப்படியா நடந்தது என்று அவரிடம் கேட்டால், நான் இதற்கு முன்பு அஞ்சலியுடன் நடித்துள்ளேன். நாங்கள் இருவருமே நல்ல தோழிகள். இந்த படப்பிடிப்பின்போது கூட நான் சண்டை போடவில்லை. தீபா ஷா சத்தமாக பேசிக் கொ்ண்டிருந்தார். அமைதியாக இருக்குமாறு மட்டும்தான் கூறினேன். சண்டையெல்லாம் நான் பிடிக்கவில்லை. இப்போது கூட எனக்கு அவர் மீது வருத்தம் இல்லை, தோழியாகத்தான் நினைக்கிறேன் என்றார்.

என்னவோ போங்கம்மா, சண்டை போட்டுக்காம சமத்தா வேலையைப் பாருங்க...!
 

Post a Comment