கோடம்பாக்கத்தில் அதிநவீன புதிய லேப் & மினி திரையரங்கம்!

|

Ravi Prasad Launches New Lab Theater Kodambakkam
திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டுடியோக்களும் லேப்களுமாக நிறைந்திருந்த கோடம்பாக்கத்தில் இன்று இரண்டு லேப்களும் மூன்று ஸ்டுடியோக்களும்தான் இயங்கும் நிலையில் உள்ளன. மற்றவை அடுக்குமாடி வளாகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று மாறிவிட்டன.

இந்த நிலையில் இப்போதைய தேவைகளுக்கேற்ப ஒரு அதி நவீன ஸ்டுடியோவை திறந்திருக்கிறார்கள். திரைத்துறையில் பல ஆண்டுகள் அவுட்டோர் யூனிட்டை நடத்தி வரும் ரவி பிரசாத் நிறுவனம் இந்த லேபைத் தொடங்கியுள்ளது. லேபின் பெயர் ரவி பிரசாத் லேப்.

இந்த லேபை சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு, டி சிவா, முரளிதரன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கோடக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டல அதிகாரி ஜெர்ரி வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து ரவி பிரசாத் லேப் நிர்வாக இயக்குநர் ரவி குமார் கூறுகையில், "1978-ம் ஆண்டு முதல் எங்கள் அவுட்டோர் யூனிட் இயங்கி வருகிறது. சினிமாவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இப்போது இந்த லேபை பிரமாண்டமாக தொடங்கியுள்ளோம்.

இங்கு சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் யு எல் ப்ளீச் செய்யப்படுகிறது. ஒரு திரைப்படம் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு தருகிறோம். ப்ரிவியூவுக்காக 50 இருக்கைகள் கொண்ட மினி திரையரங்கையும் உருவாக்கியுள்ளோம்," என்றார்.
 

Post a Comment