'தம்' அடிக்க மாட்டேன் என்று 2007-ல் கொடுத்த வாக்குறுதியை விஜய் காப்பாற்றுவாரா?- பசுமைத் தாயகம்

|

Pasumai Thaayagam Urges Vijay Keep His 2007 Promise   
இனி படங்களில் புகைப் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்ற விஜய் 2007-ல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா?, என பசுமைத் தாயகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் அருள் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் நடிப்பில் வரவிருக்கும் துப்பாக்கி படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் தாங்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் ரசிகர்களாக உள்ள நிலையில், இந்தக் காட்சி அவர்களின் எதிர்காலத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

2010-ல் 5, 56, 400 பேர் கொடிய புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் இந்தியாவில். இவர்களில் 42 சதவீத ஆண்கள் மற்றும் 18 சதவீத பெண்களுக்கு புற்று நோய் வரக் காரணம் புகையிலைப் பழக்கமே.

உங்கள் ரசிகர்களிலே கூட எத்தனையோ பேர் உரிய வயதுக்கு முன்பே உயிரிழக்க இந்த புகைப் பழக்கம் காரணமாகிறது.

இப்படிப்பட்ட கொடிய நோய் பரவ நீங்கள் துணை போகலாமா... என்று உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்.

2007-ல் நீங்கள் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த போது, இனி வரும் படங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்தீர்கள். அது அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது.

அதற்கேற்ப, அடுத்தடுத்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம், காவலன் போன்ற படங்களில் நீங்கள் புகைப் பிடிக்கவில்லை. இப்போது துப்பாக்கியில் புகைப்பிடிப்பது ஏன்?

இளையதளபதி தனது வாக்குறுதியை மீறலாமா?

நல்ல முன்னுதாரணம் ரஜினி - கமல்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழும் திரு ரஜினிகாந்த், திரு கமல்ஹாஸன், திரு சூர்யா ஆகியோரைப் பின்பற்றி புகைக்கும் பழக்கத்தை நீங்களும் கைவிட்டிருந்தீர்கள். இப்போது மீண்டும் புகைக்க காரணம் என்ன?

தயவு செய்து உங்கள் வாக்குறுதியை மீற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Post a Comment