துப்பாக்கிக்கு ஆதரவாக பிலிம்சேம்பர் பதில் மனு - வழக்கு ஒத்தி வைப்பு - தொடரும் சிக்கல்!

|

Vijay S Thuppakki Is Still Trouble    | விஜய்  

சென்னை: விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

விஜய் நடித்து வரும் `துப்பாக்கி’ என்ற படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு நார்த் ஈஸ்ட் பிலிம் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ரவிதேவன், சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை ரத்து செய்யக்கோரி துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் 5-வது எதிர் மனுதாரரான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தென்னிந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் நபர்கள் எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் தயாரிக்கும் படத்தின் தலைப்பை பதிவு செய்வது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பணியாகும்.

ஒரு தலைப்பை உறுப்பினர்கள் பதிவு செய்யும்போது, அதுபோன்ற தலைப்பு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என சரிபார்க்கப்படும். தலைப்பு பதிவு செய்யப்பட்ட பின்னர், 6 மாதத்துக்கு ஒரு முறை தலைப்பை புதுப்பிக்க வேண்டும். இந்த தலைப்பு பதிவு செய்வது எல்லாம் காப்புரிமை சட்டத்தின்படி கிடையாது. ஆனால், இந்த நடைமுறைகள் சுய ஒழுங்குமுறைகளின்படி பின்பற்றப்படுகிறது.

மனுதாரர் `கள்ளத்துப்பாக்கி’ என்ற தலைப்பை பதிவு செய்தார். ஒருவர் பதிவு செய்த தலைப்பின் முன்பகுதி அல்லது பின்பகுதியை வேறு உறுப்பினர்களும் பதிவு செய்யும் நடைமுறைகள் உள்ளன.

‘கிராமம்’ என்ற தலைப்பை ஒருவர் பதிவு செய்துள்ளார். மற்றொருவர் `திருட்டு கிராமம்’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல `ஆதி’, ‘ஆதிசிவம்’ என்று பல தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரவிதேவன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தனர்.

தடை நீடிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், வழக்கு விசாரணையை 3-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார். அதுவரை ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Post a Comment