கிராமங்களில் அதிக நற்பணிகள் செய்யும் நிர்வாகிகளுக்கு விருந்து, பரிசு! - விஜய்யின் அதிரடித் திட்டம்

|

Vijay Honours His Fan Club Functionaries

தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளில் அதிக நற்பணிகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக நற்பணிகள் செய்வோருக்கு ஊக்கப் பரிசு வழங்கினார் நடிகர் விஜய்.

விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். விஜய் பிறந்த நாள், அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமல்லாமல், இயற்கைப் பேரிடர்களின் போதும் அவர்கள் தங்களால் ஆன பணிகளை மக்களுக்குச் செய்கின்றனர்.

இத்தகைய பணிகளை அவர்கள் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவு மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நற்பணிகளில் ஈடுபட்டுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களை தனது ஜேஎஸ் கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்தார் விஜய். அதிக நற்பணிகள் செய்த ரசிகர்களுக்கு செயின் மற்றும் மோதிரங்களைப் பரிசளித்தார்.

அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கியதோடு, நீண்டநேரம் அனைவருடனும் பேசி, அறிவுரை வழங்கினார்.

ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே மன்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்கு இதுபோல விருந்தும் பரிசளிப்பும் தொடரும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Post a Comment