திருமதிகளின் செல்லப்பிள்ளை நான்: சஞ்சீவ்

|

Actor Anchor All Round Tirumathi

சின்னத்திரையில் திருமதி செல்வம் தொடரில் ஹீரோ, மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பன்முகம் காட்டும் சஞ்சீவ் இன்றைக்கு திருமதிகளின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். பத்தாண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்துவரும் சஞ்சீவ் தனது பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்கள்.

மஞ்சுளா விஜயகுமார் எனக்கு உறவினர் என்பதால் சிறுவயதிலேயே சினிமாத்துறைக்கு வந்துவிட்டேன். என்னுடைய அக்கா சிந்து திரைப்படங்கள், டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். ஆஸ்துமா பிரச்சினையினால் திடீரென்று இறந்து போய்விட்டார். அவர் மெட்டி ஒலி தொடரில் நடித்த போது எனக்கும் அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் முதன்முதலாக மெட்டி ஒலி தொடரில் இளங்கோ கதாபாத்திரம் என்னை அடையாளப்படுத்தியது. இயக்குநர் திருமுருகன்தான் எனக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்தார். இயக்குநர் சி.ஜெ. பாஸ்கர் என்னை செதுக்கினார்.

திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.

முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.

"மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.

என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.

நானும் நடிகர் விஜயும் ஒன்றாக படித்தவர்கள். அதனால் விஜய் நடித்த பத்ரி, நிலாவே வா, புதியகீதை உள்ளிட்ட படங்களில் நானும் நடித்திருக்கிறேன். பூ பறிக்க வருகிறோம் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சீரியலில் நடிப்பதற்கு நேரம் சரியாக இருப்பதால் தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

என் மனைவி ப்ரித்தி. சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். அவர் எனக்கு ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருக்கிறார். எங்களின் செல்லமகள் லயாதான் இப்போது எங்கள் உலகமே என்று கூறிவிட்டு சீரியலில் நடிக்க தயாரானார் செல்வம்.

 

Post a Comment