சென்னை: ஐ படத்தில் எனக்கு ஜோடியாக எமியைத்தான் போட வேண்டும் என சிபாரிசு செய்யவில்லை என நடிகர் விக்ரம் கூறினார்.
விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம், `தாண்டவம்.’ ஏஎல் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஐநாக்ஸில் நடந்தது.
அப்போது விக்ரம் உள்ளிட்ட தாண்டவம் படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். விக்ரம் கூறுகையில், “இது ஒரு மாறுபட்ட படம். எனக்கு இதில் இரட்டை வேடங்கள் என்று சொல்ல முடியாது. இரட்டை வேடங்கள் போல் தோன்றும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். `ரா’ (உளவுப்பிரிவு) அதிகாரியாக நடிக்கிறேன்.
படத்தில் எனக்கு இரண்டு ஜோடி. முதல் பாதியில் எமிஜாக்சன் வருவார். இரண்டாம் பாதியில் அனுஷ்கா வருவார். இருவருக்குமே சமமான கேரக்டர்கள். அருமையாக நடித்துள்ளனர்.
தமிழ் பட உலகின் மிக சிறந்த டைரக்டர்களில் விஜய்யும் ஒருவர். இனிமையான மனிதர். நல்ல நண்பர். நல்ல சகோதரர். தயாரிப்பாளர்களின் டைரக்டர்,” என்றார்.
உங்களுக்கும், எமிஜாக்சனுக்கும் முத்த காட்சி இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “இந்த படத்தில் இல்லை. வேண்டுமானால் ஷங்கரிடம் சொல்லி, `ஐ’ படத்தில் வைக்க சொல்கிறேன்”, என்றார்.
‘ஐ’ படத்துக்கு எமிஜாக்சனை நீங்கள்தான் சிபாரிசு செய்தீர்களாமே?, என்ற கேள்விக்கு, ‘எமிஜாக்சன் லண்டனை சேர்ந்தவர். `ஐ’ படத்துக்கு அவர் தேவைப்பட்டார். அதனால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நான் சிபாரிசு செய்யவில்லை”, என்றார்.
ஏற்கனவே `காசி’ படத்தில் கண்பார்வையற்றவராக நடித்து இருந்தீர்கள். மீண்டும் இந்த படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரி இருக்காதா?, என்ற கேள்விக்கு, “மம்முட்டி 35 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.
நான், `காசி’ படத்தில் மட்டும் பார்வையற்றவராக நடித்தேன். அந்த படத்தின் கதாபாத்திரத்துக்கும், இந்த படத்தின் கதாபாத்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இன்னும் 5 படங்களில் கூட கண்பார்வையற்றவராக, ஐந்து விதமாக என்னால் நடிக்க முடியும்,” என்றார் விக்ரம்.
இயக்குநர் விஜய்
இயக்குநர் விஜய் கூறுகையில், “இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் பார்வையற்ற, ஆனால் எதையும் எளிதில் உணர்வால், ஒலியலைகளால் புரிந்து கொண்டு, பார்வைக் குறைபாடே தெரியாமல் வாழ்கிற ஒரு பாத்திரம். அதை விக்ரம் அருமையாகச் செய்துள்ளார். இந்தப் பாத்திரம் நிஜத்தில் உள்ள ஒரு கேரக்டர். படத்தின் இசை வெளியீட்டின் போது அவரை நேரில் வரவழைக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
நடிகை எமி ஜாக்சனும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தமிழ்ப் படத்தில் நடிப்பதை பெருமையாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment