சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனின் சென்னை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், தங்க நகைகள் திருட்டுப் போயின. இதுதொடர்பாக அவர் கொடுத்த போலீஸ் புகாரின் பேரில் வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வேலைக்காரப் பெண் கடந்த 7 வருடமாக ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்தவராம்.
ரம்யா கிருஷ்ணனின் வீடு சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அங்கு தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் இருந்த நகைப் பெட்டியை ரம்யா கிருஷ்ணன் திறந்து பார்த்தபோது அதில் இருந்த வைர நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளைக் காணவில்லை என்று தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா கிருஷ்ணன், தனது தாயாருடன் நீலாங்கரை காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வேலைக்காரப் பெண் ஜோதியைக் கைது செய்தனர். அவர்தான் நகைகளைத் திருடியதாக தெரிய வந்துள்ளதாம். அவரிடமிருந்து நகைகளை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனராம்.
Post a Comment