சவால்களை விரும்புபவர் என் மகன் விஜய்... - எஸ்ஏசி பெருமை

|

Sac Hails His Son Vijay As Lover Challenges

என் மகன் விஜய் ஒரு கடின உழைப்பாளி. பெரும் சவாலாகத் திகழ்ந்த திரைப்படத் துறையில் ஜெயித்தவர் என்று புகழாரம் சூட்டினார் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கி வெளியிட்டு வெற்றி பெற்ற ‘சட்டம் ஒரு இருட்டறை' படம் இப்போது அதே பெயரில் ரீமேக் ஆகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவி சினேகா பிரிட்டோ இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாக அரங்கில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, "என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவர் நடிகராக விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன்.

அதன்பிறகு நடிப்புத் துறையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். சவால்களை விரும்புபவர் விஜய்.

பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான். அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.

‘நாளைய தீர்ப்பு' படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார்கள். இப்போது என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று கூறுகிறார்கள். இந்த நிலையை ஒவ்வொரு தந்தைக்கும் மகன்கள் மகள்கள் உருவாக்கித் தரவேண்டும்," என்றார்.

 

Post a Comment